4 பிள்ளைகளை வளர்த்து என்ன பயன்? உடலைக் எடுக்கக்கூட வராத பிள்ளைகள்; போபாலில் நிகழ்ந்த சோகம்
செய்தி முன்னோட்டம்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 70 வயதான கன்ஷ்யாம், தனது மனைவியின் மறைவுக்குப் பிறகு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் என 4 பிள்ளைகளையும் தனியாளாகக் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினார். சைக்கிள் டயர் விற்பனை செய்யும் சிறிய தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்றிய அவர், இந்தூரில் உள்ள தனது சிறிய வீட்டையும் விற்று பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுத்தார். ஆனால் வயது முதிர்ந்த காலத்தில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவரை பிள்ளைகள் யாரும் பராமரிக்காமல் அனாதையாகக் கைவிட்டுப் பிரிந்து சென்றனர்.
முதியோர் இல்லம்
பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்டு முதியோர் இல்லத்தில் தஞ்சம்
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போபால் பேருந்து நிலையத்தில் பேசக்கூட முடியாமல் பரிதாப நிலையில் கைவிடப்பட்டுக் கிடந்த கன்ஷ்யாமை, சமூக சேவகர்கள் சிலர் மீட்டு அப்னா கர் என்ற முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.
அங்குள்ள நிர்வாகிகள் அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும் பராமரிப்பையும் வழங்கி வந்தனர்.
அவரது உடல்நிலை மோசமடையும் போதெல்லாம் இல்லத்தின் நிர்வாகிகள் பிள்ளைகளைத் தொடர்புகொள்ள முயன்ற போதிலும், அவர்கள் தந்தையைப் பார்க்க வர மறுத்து முழுமையாகப் புறக்கணித்து வந்தனர்.
கொடூரம்
மரணத்திற்குப் பிறகும் வர மறுத்த பிள்ளைகளின் கொடூரம்
கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி கன்ஷ்யாம் சிகிச்சை பலனின்றி முதியோர் இல்லத்தில் உயிரிழந்தார்.
அவரது இறப்பு குறித்து பிள்ளைகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடலைப் பெற்றுக்கொள்ளுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் சொத்துப் பிரிவினையில் அதிருப்தி அடைந்ததாகக் கூறி பிள்ளைகள் அனைவரும் வர மறுத்து சாக்குபோக்கு கூறினர்.
இறுதியில் "நீங்களே இறுதிச் சடங்கை முடித்துவிட்டு இறப்புச் சான்றிதழை அனுப்புங்கள்" என்று கூறி போனைத் துண்டித்தது அனைவரையும் உரைய வைத்தது.
இறுதிச் சடங்கு
காவல்துறை உதவியுடன் நடந்த இறுதிச் சடங்கு
இரண்டு நாட்கள் காத்திருந்தும் பிள்ளைகள் யாரும் வராததால், முதியோர் இல்ல நிர்வாகி மாதூரி மிஸ்ரா காவல்துறையின் உதவியோடு கன்ஷ்யாமின் இறுதிச் சடங்குகளை செய்து முடித்தார்.
தற்போது கன்ஷ்யாமின் இறப்பு சான்றிதழைக் கேட்டுப் பிள்ளைகள் வற்புறுத்தி வரும் நிலையில், "வாழும் போது பார்க்க வராதவர்களுக்கு சான்றிதழைத் தர முடியாது" என முதியோர் இல்ல நிர்வாகம் உறுதியாக மறுத்துவிட்டது.
சமீபத்தில் தந்தையின் இறுதிச் சடங்கை வீடியோ கால் மூலம் பார்த்த ஒரு சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் பெற்றோரைக் கைவிடும் சமூகத்தின் சீரழிவு அதிகரித்து வருவதை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.