மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம் மாமல்லப்புரத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை சார்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை கவரும் வண்ணம் நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், நேற்று துவங்கிய இந்த விழா அடுத்த மாதம் 12ம் தேதி வரை, 20 நாட்களுக்கு மட்டுமே நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நேற்று துவங்கிய இந்த விழாவிற்கு வந்தவர்களை சுற்றுலாத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன் வரவேற்றார். சிறு குறு தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் விழாவிற்க்கு முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இந்நிகழ்ச்சியை தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
20 நாட்களுக்கு பாரம்பரிய நாட்டியங்களும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்தியாவில் வெளிநாட்டு பயணிகள் அதிகம் வரும் இடத்தில் தாஜ்மகாலை பின்னுக்கு தள்ளி மாமல்லபுரம் முதலில் இடம் பிடித்திருப்பது உண்மையில் பெருமைப்படக்கூடிய ஓர் நிகழ்வாகும். 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் இங்குள்ள சிற்பங்களை வடிவமைத்து, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்" என்று கூறினார். மேலும் மாமல்லபுரத்தில் பல சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதல் நாள் நிகழ்ச்சியில் மதுரை கோவிந்தராஜ் குழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சிகள், சென்னை இசை கல்லூரி மாணவர்களின் நாதஸ்வர இசை கச்சேரி, பிரியதர்ஷினி நிருத்யாலயா குழுவினரின் பரதநாட்டியம் ஆகியவை அரங்கேறியது. மேலும் பரதம், குச்சிப்பிடி, ஒடிசி போன்ற பாரம்பரிய நாட்டியங்களும், கரகம், காவடி போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.