இந்திய விமானப்படையின் இரண்டாவது பெண் பைலட்-உத்தரப்பிரேதேசத்தை சேர்ந்த சானியா மிர்ஸா தேர்வு
உத்தரப்பிரேதேச மாநிலம், மிர்சாப்பூரை சேர்ந்தவர் ஷாகித் அலி. டிவி மெக்கானிக்காக பணியாற்றி வரும் இவரது மகள் சானியா மிர்ஸா, இந்திய விமானப் படையில் போர் விமானியாக தேர்வாகியுள்ளார். அண்மையில், இந்திய பாதுகாப்பு படையில் உள்ள 400 காலி இடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டது. இதில் போர் விமானங்களை இயக்கும் பிரிவில் 2 பெண்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், சானியா மிர்ஸா இத்தேர்வினை எழுதி அதில் தேர்வாகியுள்ளார். இதன் மூலம் அவர், இந்திய போர் விமானத்தை இயக்கப்போகும் முதல் இஸ்லாமிய பெண்மணி மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் விமானி பெருமையை பெற்றுள்ளார். அவரது இந்த வெற்றியை குடும்பத்தினர்கள், நண்பர்கள், அந்த ஊர் மக்கள் என அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.
தனது மகளின் வெற்றி குறித்து பேசிய சானியா மிர்ஸாவின் தந்தை
இந்நிலையில் சானியா மிர்ஸாவின் தந்தை ஷாகித் அலி கூறுகையில், "நாட்டின் இரண்டாவது பெண் போர் விமானி எனது மகள் சானியா மிர்ஸா என்பது குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். எனது மகள் நாட்டின் முதல் போர் விமானியான அவ்னி சதுர்வேதியை போல் வரவேண்டும் என்றே குறிக்கோளோடு இருந்தார். குருநானக் பெண்கள் கல்லூரியில் பட்டப்படிப்பினை முடித்த என் மகள் செஞ்சுரியன் டிஃபன்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார். பின்னர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றார். எங்களது மகள் எங்கள் எல்லோரையும் பெருமைப்படுத்தியதோடு, அவரது கனவையும் நிறைவேற்றியுள்ளார்" என்று பெருமையுடன் கூறினார்.