இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 24 மணிநேரத்தில் 2,994 புதிய தொற்றுகள் பதிவு
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று(ஏப்ரல்.,1) மத்திய அமைச்சகம் கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணிநேரத்தில் 2,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி தற்போது கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்களது எண்ணிக்கை 16,354ஆக உயர்ந்துள்ளது என்று அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு தற்போது கொரோனா அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் கவலையையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தான் கொரோனா பாதிப்பு விகிதாசார அடிப்படையில் அதிகமாக உள்ளது
இந்நிலையில் தற்போது கொரோனா அதிகரிக்க புதிய வகை எக்ஸ்பிபி.1.16 வைரஸ் தான் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.47 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில் தான் கொரோனா பாதிப்பு விகிதாசார அடிப்படையில் அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.