அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கையை நிராகரித்தது இந்தியா; வெளியுறவு அமைச்சகம் பதிலடி
அமெரிக்க அரசின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான கமிஷனின் (USCIRF) சமீபத்திய அறிக்கையை இந்திய அரசாங்கம் கடுமையாக நிராகரித்துள்ளது. இந்தியாவில் மதச் சுதந்திரம் மோசமடைந்து வருவதாக அமெரிக்க மத சுதந்திர கமிஷன் கூறியுள்ளதோடு, இந்தியாவை குறிப்பிட்ட பிரச்சினையுள்ள நாடு என்று நியமிக்க அழைப்பு விடுத்துள்ளது. இந்த அறிக்கை குறித்த ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இது இந்தியாவைப் பற்றிய உண்மைகளை தவறாக சித்தரிக்கிறது என்றார். முன்னதாக, USCIRF ஒரு அறிக்கையில், இந்தியாவில் மத சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களைத் தூண்டுவதற்கு அரசில் பொறுப்பில் உள்ளவர்களின் வெறுப்புப் பேச்சு காரணமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல்
ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுகுறித்து கூறுகையில், "USCIRF பற்றிய எங்கள் கருத்துக்கள் நன்கு அறியப்பட்டவை. இது ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலைக் கொண்ட ஒரு பக்கச்சார்பான அமைப்பாகும். அது தொடர்ந்து உண்மைகளை தவறாக சித்தரித்து, இந்தியாவைப் பற்றிய பொய்யான பிம்பத்தை கட்டமைக்க முயல்கிறது." என்றார். இந்த பொய்யான அறிக்கையை அரசாங்கம் நிராகரிப்பதாக கூறிய அவர், இது USCIRFஐ மேலும் இழிவுபடுத்துவதற்கு மட்டுமே உதவுகிறது என்றும் கூறினார். அவர் மேலும், USCIRF அமெரிக்காவிற்குள் மனித உரிமைகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் பயனடையும் என்றும் அவர் பரிந்துரைத்தார். USCIRFஐ அதன் அறிக்கைகளுக்காக இந்தியா விமர்சிப்பது இது முதல் முறையல்ல. இந்தியாவில் மத சுதந்திரம் குறித்த ஒரு சார்பு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.