Loading...
சிந்து நதி நீர் ஒப்பந்தம்: அதிகாரமில்லை எனக் கூறி சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்தது இந்தியா

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: அதிகாரமில்லை எனக் கூறி சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்தது இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Aug 31, 2026
07:03 pm

செய்தி முன்னோட்டம்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச நடுவர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை இந்தியா திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) முற்றிலும் நிராகரித்துள்ளது. உலக வங்கியால் அமைக்கப்பட்ட இந்த நடுவர் நீதிமன்றம் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டது என்றும், இந்தியாவின் இறையாண்மை சார்ந்த முடிவுகள் மீது தீர்ப்பளிக்க இந்த அமைப்பிற்கு எந்தவிதமான அதிகார வரம்பும் கிடையாது என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஒப்பந்த இடைநிறுத்தம்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலும் ஒப்பந்த இடைநிறுத்தமும்

கடந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருவதைக் கண்டித்து, அந்நாட்டிற்கு எதிரான தண்டனை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 1960 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்தது.

இந்த இடைநிறுத்த உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என இந்தியா தற்போது மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

வெளியுறவுத் துறை

வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் காரசார அறிக்கை

இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒப்பந்தத்தின் விதிகளை மீறி உலக வங்கியால் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட இந்த நடுவர் நீதிமன்றத்தை சட்டப்பூர்வமான அமைப்பாக இந்தியா ஒருபோதும் அங்கீகரித்தது இல்லை.

எனவே, இந்த அமைப்பு தற்போது வழங்கியுள்ள அல்லது எதிர்காலத்தில் வழங்கவுள்ள எந்தவொரு தீர்ப்பும், இந்தியாவால் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்மின் திட்டங்கள் மற்றும் நாட்டின் செயல்பாடுகள் மீது எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்று காரசாரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தீர்ப்பு

நடுவர் நீதிமன்றம் கூறிய தீர்ப்பு விவரங்கள்

முன்னதாக, நடுவர் நீதிமன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதற்கான காரணங்களை ஆய்வு செய்ததாகவும், ஆனால் ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்யவோ அல்லது ரத்து செய்யவோ அவை போதுமான காரணங்களாக இல்லை என்றும் தெரிவித்தது.

மேலும், மேற்கு நதிகளில் அமைக்கப்படும் நீர்மின் திட்டங்களின் வடிவமைப்பு மற்றும் இயக்கம் குறித்த ஒப்பந்த விதிகளுக்கு இந்தியா தொடர்ந்து கட்டுப்பட வேண்டும் என்றும் அது குறிப்பிட்டிருந்தது.

எனினும், இந்த நீதிமன்ற விசாரணைகளில் இந்தியா பங்கேற்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT