LOADING...
ஐஐடியில் படித்துவிட்டு அமெரிக்காவுக்கு பறக்கும் இந்திய மேதைகள்! 30 ஆண்டுகால ஜேஇஇ தரவுகள் சொல்லும் அதிர்ச்சி உண்மை
30 ஆண்டுகளில் 23 ஜேஇஇ டாப்பர்கள் வெளிநாட்டில் குடியேறியதாக ஆய்வில் தகவல்

ஐஐடியில் படித்துவிட்டு அமெரிக்காவுக்கு பறக்கும் இந்திய மேதைகள்! 30 ஆண்டுகால ஜேஇஇ தரவுகள் சொல்லும் அதிர்ச்சி உண்மை

எழுதியவர் Sekar Chinnappan
Apr 03, 2026
05:39 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் மிக உயரிய பொறியியல் நுழைவுத்தேர்வான ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், இந்தியாவில் தங்கிப் பணியாற்றுவதை விட வெளிநாடுகளுக்கு செல்வதையே அதிகம் விரும்புகின்றனர் என்பதை ஒரு புதிய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. 'Careers 360' நடத்திய இந்த ஆய்வின்படி, 1990 முதல் 2021 வரையிலான 31 ஆண்டுகளில் முதலிடம் பிடித்தவர்களில் 23 பேர் தற்போது வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் தங்களது முதுகலை அல்லது பிஹெச்டி படிப்பை வெளிநாடுகளிலேயே முடித்துள்ளனர். இது இந்தியாவின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் சூழலில் உள்ள பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அமெரிக்கா

அமெரிக்கா இந்திய மேதைகளின் முதன்மைத் தேர்வாக மாறியது எப்படி?

இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இன்றும் அமெரிக்காவே மிக முக்கியமான விருப்பமான இடமாக உள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 31 டாப்பர்களில் 54.8 சதவீதத்தினர், அதாவது 17 பேர் அமெரிக்காவிலேயே தங்கிவிட்டனர். இந்தியாவிற்கு அடுத்தபடியாகச் சுவிட்சர்லாந்து, கனடா, நெதர்லாந்து, ஹாங்காங் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளிலும் தலா ஒரு சில மாணவர்கள் குடியேறியுள்ளனர். 1990-2010 காலகட்டத்தில் 66.7 சதவீத மாணவர்கள் அமெரிக்காவுக்குச் சென்ற நிலையில், 2011-2021 காலகட்டத்தில் இது 90 சதவீதமாக உயர்ந்துள்ளது. சிலிக்கான் வேலியின் வளர்ச்சிக்கு இந்தியப் பொறியாளர்கள் முக்கியப் பங்காற்றினாலும், அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளத் தேவையான சூழலை உருவாக்க இந்தியா இன்றும் தடுமாறி வருகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள்

ஆராய்ச்சிப் படிப்பில் இருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாறிய ஆர்வம்

2000 ஆம் ஆண்டிற்கு முந்தைய காலகட்டத்தில் ஜேஇஇ டாப்பர்கள் பெரும்பாலும் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையிலேயே கவனம் செலுத்தினர். அந்த சமயத்தில் முதலிடம் பிடித்த 11 பேரில் 6 பேர் சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். ஆனால், 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. தற்போதைய மாணவர்கள் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் தொழில்களையே அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். கூகுள் முதல் மைக்ரோசாஃப்ட் வரை இந்தியர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தாலும், அவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலேயே தங்களது வெற்றியைத் தேடிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

எச்சரிக்கை

இந்தியாவிற்கான எச்சரிக்கை மணி: ஏன் இங்கிருக்க மறுக்கிறார்கள்?

இந்தத் தரவுகள் தொழில்நுட்ப வல்லரசாக மாறத் துடிக்கும் இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாகும். இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் இருந்தாலும், மாணவர்களின் முழுத் திறமையை வெளிக்கொணரத் தேவையான ஆராய்ச்சி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை சார்ந்த ஊக்கத்தொகைகள் இங்கு மிகக் குறைவாகவே உள்ளன. இந்தியாவின் மிகச்சிறந்த மூளைகள் மற்ற நாடுகளின் வளர்ச்சிக்காக உழைக்கும் நிலையை மாற்ற, புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான சூழலை இந்தியாவிலேயே உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். "சிறந்த மூளைகளை இந்தியாவிலேயே தங்க வைக்க நாம் என்ன செய்யப்போகிறோம்?" என்பதே இந்த ஆய்வின் இறுதி கேள்வியாக உள்ளது.

Advertisement