பொங்கல் பரிசுக்கான கரும்புகள் இன்ச் டேப்பில் அளந்து கொள்முதல்
2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கோலாகலமாக தமிழகத்தில் கொண்டாடப்படவுள்ளது. தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பினை இணைக்க கோரிக்கைகள் எழுந்த நிலையில், கரும்பு கொள்முதல் தற்போது செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 742ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டிருக்கிறது என்கிற நிலையில், அதில் 40 ஏக்கர் கரும்பு மட்டுமே போதுமானது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து கரும்பு கொள்முதல் பணிகளை மேற்கொண்டுள்ளது. திம்மராவுத்தன் குப்பம் பகுதியில் நடந்த கொள்முதல் பணிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வினை மேற்கொண்ட பின்னர், மாவட்ட ஆட்சியர் 6 அடி குறைவாக உள்ள கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிட்டார்.
இன்ச் டேப் கொண்டு கரும்புகளை அளந்து கொள்முதல் செய்த அதிகாரிகள்
இந்த உத்தரவில் அதிகாரிகள் கையெழுத்திட்டனர், பின்னர் அதிகாரிகள் இன்ச் டேப் கொண்டு கரும்புகளை அளந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் ஆட்சியரிடம் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு வயலில் உள்ள அனைத்து கரும்புகளையும் கொள்முதல் செய்தால் தான் உரிய லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்கள். அதற்கு அவர், "நானும் விவசாய குடும்பத்தில் இருந்து தான் வந்துள்ளேன். உங்கள் கஷ்டம் எனக்கும் புரியும். ஆனால் முதல்வர் வெளியிட்ட அரசாணையில் 6 அடி உயர கரும்பு என குறிப்பிட்டுள்ளார்" என்று கூறினார். மேலும் அவ்வாறு தான் கொள்முதல் செய்யப்படும், இல்லையேல் பொதுமக்கள் நீங்களே 6 அடி உயர கரும்பை கூறியவாறு கொடுக்கவில்லை என்று குறை கூறுவீர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.