சென்னையில் கேக் வெட்டி தனது 108வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி
சென்னை:தற்போதைய காலகட்டத்தில் சிறு வயதிலேயே சர்க்கரை நோய், மாரடைப்பு போன்றவை மிகவும் சாதாரணமாகி விட்டது. சிறு வயதிலேயே நோயால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி கொண்டு தான் உள்ளது. இதற்கு மத்தியில் மூதாட்டி ஒருவர் தனது 108 வயதிலும் ஆரோக்கியமாக இருப்பது அனைவர் மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி தெய்வானை. இவர் தனது 108வது பிறந்தநாளினை பட்டு சேலை கட்டிக்கொண்டு கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். அவரிடம் அருகாமையில் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், வியாபாரிகள் ஆகியோர் ஆசி பெற்றனர். இந்நிலையில் தெய்வானையின் மகளான 78 வயதுடைய சின்ன பொண்ணு அவரது தாயார் குறித்து சில தகவல்களை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
வெறும் 2 இட்லி, 1 டம்ளர் பால் குடித்து உயிர்வாழும் மூதாட்டி
அவர் கூறியதாவது, நான் எனது தந்தையை பார்த்தது கூட இல்லை. எல்லாமே எனக்கு என் தாய் தான். சிறு வயதிலிருந்தே கட்டிட வேலை, வீட்டு வேலை செய்து தான் என்னையும் என் தம்பிகளையும் வளர்த்து வந்தார். எனது 2 தம்பிகளும் தற்போது இல்லை, இறந்து விட்டனர். இந்நிலையில் என் தாயார் என்னுடன் தான் வசித்து வருகிறார் என்று அவர் கூறியுள்ளார். தொடர்ந்து அவர் தனது தாயார் உணவாக காலையில் வெறும் 2 இட்லிகள் மட்டுமே சாப்பிடுவார் என்றும், இரவில் ஒரு டம்ளர் பால் மட்டும் குடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் காலையில் கைத்தாங்கலாக சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்வார். இதுவே அவரது ஆரோக்கியத்திற்கு காரணம் என்று சின்ன பொண்ணு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.