காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இடையிலான ட்விட்டர் சண்டை
செய்தி முன்னோட்டம்
சூடானில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு நடுவில் கர்நாடகாவை சேர்ந்த 31 பேர் அங்கு சிக்கி இருப்பதாக நேற்று(ஏப்-18) தகவல்கள் வெளியாகி இருந்தது.
இதை தொடர்ந்து, கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, "சூடானில் உள்ள ஹக்கி பிக்கி சமூகத்தினர் கடந்த சில நாட்களாக உணவின்றி தவித்து வருகின்றனர், அவர்களை மீட்க அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. பாஜக அரசாங்கம் ஹக்கி பிக்கிகளின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கு உடனடியாக இராஜதந்திர விவாதங்களை ஆரம்பித்து சர்வதேச நிறுவனங்களை அணுக வேண்டும்." என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தது.
இந்த பதிவு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் கவனத்தைப் பெற்றது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "உங்கள் ட்வீட்டைக் கண்டு திகைத்துவிட்டேன்! உயிர்கள் ஆபத்தில் உள்ளன; இதை வைத்து அரசியல் செய்யாதீர்கள்." என்று கூறியிருந்தார்.
details
சூடானில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்: வெளியுறவுத்துறை அமைச்சர்
மேலும்,"ஏப்ரல் 14ஆம் தேதி சண்டை தொடங்கியதில் இருந்து, கார்டூமில் உள்ள இந்திய தூதரகம் சூடானில் உள்ள பெரும்பாலான இந்திய மக்கள் மற்றும் PIOகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது." என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ட்விட்டரில் கூறியிருந்தார்.
இதனால் ட்விட்டரில் ஒரு காரசாரமான சண்டை ஆரம்பமானது.
இந்த பதிவுக்கு பதிலளித்த சித்தராமையா, "நீங்கள் வெளியுறவுத் துறை அமைச்சராக இருப்பதால், நான் உங்களிடம் உதவி கோரினேன். நீங்கள் திகைப்பதில் மும்முரமாக இருந்தால், எங்கள் மக்களை மீட்டெடுக்க எங்களுக்கு உதவக்கூடிய நபரையாவது காட்டுங்கள்." என்று பதிலளித்திருந்தார்.
அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனி ஒரு ட்விட்டர் பதிவில், "பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களின் விவரங்கள் மற்றும் இருப்பிடங்களை பகிர்ந்துகொள்ள முடியாது. நடந்து கொண்டிருக்கும் கடுமையான சண்டைகளால் அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது." என்று தெரிவித்திருக்கிறார்.