காங்கிரஸ் வென்றால் கர்நாடகா கலவர பூமியாக மாறும்: அமித்ஷா
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் கலவரங்கள் வெடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று(ஏப் 25) தெரிவித்தார். பெலகாவி மாவட்டத்தில் உள்ள தேர்தலில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமித்ஷா, காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மாநிலத்தின் வளர்ச்சி "ரிவர்ஸ் கியரில்" செல்லும் என்று கூறியுள்ளார். மே 10ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கும் கர்நாடகாவில் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட மக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறிய அமித்ஷா, பாஜகவால் மட்டுமே மாநிலத்தை 'புதிய கர்நாடகா'வை நோக்கி அழைத்துச் செல்ல முடியும் என்றும் தெரிவித்தார். "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பரம்பரை அரசியல் உச்சத்தில் இருக்கும், கர்நாடகா கலவரங்களால் பாதிக்கப்படும்." என்று அமித்ஷா கூறியிருக்கிறார்.
அமித்ஷா நேற்று கர்நாடாக தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியதாவது:
காங்கிரஸ் தவறுதலாக ஆட்சிக்கு வந்தால், ஊழல் அதிகமாகும். காங்கிரஸ் எப்போதும் லிங்காயத் சமூகத்தை அவமதித்து வருகிறது. ஏனெனில், காங்கிரஸின் நீண்ட ஆட்சியில் இரண்டு லிங்காயத் முதல்வர்கள் மட்டுமே மாநிலத்தை ஆட்சி செய்தனர். ஆனால், அந்த இரண்டு லிங்காயத் முதல்வர்களும்(எஸ் நிஜலிங்கப்பா மற்றும் வீரேந்திர பாட்டீல்) அவமானப்படுத்தப்பட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். JD(S)ஐப் பயன்படுத்தி எடியூரப்பாவை வீழ்த்திய பிறகு, எங்கள் தலைவர்கள் சிலரின் உதவியுடன் நீங்கள் முன்னேற விரும்புகிறீர்கள். ஆனால் கர்நாடக மக்கள், குறிப்பாக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள 'கிட்டூர் கர்நாடகா' பகுதியைச் சேர்ந்தவர்கள் அதை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். என்று கூறியுள்ளார்.