"ஹனி டிராப் வலை.. உளவு அப்ளிகேஷன்!" பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கசியவிட்ட இந்திய விமானப்படை அதிகாரி கைது
செய்தி முன்னோட்டம்
இந்திய நாட்டின் பாதுகாப்பு தொடர்பான மிகவும் உணர்வுப்பூர்வமான ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்த பெண்ணிற்கு கசியவிட்ட குற்றத்திற்காக, இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் தரத்தையுடைய அதிகாரி ஒருவர் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 30 அன்று கைது செய்யப்பட்ட அந்த அதிகாரி மீது அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது திலார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணை முடிவடைந்த நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் ஜூலை 30 அன்று குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரகசியங்கள்
வீடியோ கால்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் கசிந்த ரகசியங்கள்
தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்தித்து வந்த அந்த அதிகாரியை, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பால் இயக்கப்பட்ட ஒரு பெண் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகிப் மெல்ல மெல்ல தனது வசப்படுத்தியுள்ளார்.
அடிக்கடி சாட்டிங் மற்றும் வீடியோ கால்களில் பேசி வந்த அந்தப் பெண், இந்திய ராணுவ வீரர்களின் நடமாட்டம், போர்ப் படைகளின் குவிப்பு மற்றும் முக்கியமான ராணுவத் தளங்கள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் கேட்டுப் பெற்றுள்ளார்.
அதிகாரியும் அந்தப் பெண்ணை முழுமையாக நம்பிப் பல ரகசிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது.
உளவு அப்ளிகேஷன்
சக அதிகாரியின் போனில் ரகசிய உளவு அப்ளிகேஷன்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மற்றொரு திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது.
அந்த சந்தேகத்திற்குரிய பாகிஸ்தான் பெண், இந்திய அதிகாரியைக் கொண்டு அவரது சக அதிகாரியின் மொபைல் போனில் ஒரு தீங்கிழைக்கும் உளவு அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளார்.
இந்த ஆபத்தான அப்ளிகேஷன் போனில் உள்ள ரகசியத் தரவுகளைத் திருடுவதற்கும், அந்த அதிகாரியின் இருப்பிடத்தைக் கண்காணிப்பதற்கும் மற்றும் அவரது தொலைபேசி உரையாடல்களைக் கேட்கவும் பயன்பட்டுள்ளதை புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
தீவிர கண்காணிப்பு
விமானப்படையின் தீவிரக் கண்காணிப்பும் டெல்லி போலீஸ் நடவடிக்கையும்
விமானப்படையின் உளவுப் பிரிவினர் நடத்திய தீவிர மின்னணு கண்காணிப்பில் குறிப்பிட்ட இந்த அதிகாரியின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமளிப்பதாக தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விமானப்படை தனது அதிகாரிகளுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் சர்வதேச அளவிலான பெரிய உளவு வலைப்பின்னல் ஏதேனும் பின்னணியில் உள்ளதா என்பது குறித்து டெல்லி சிறப்புப் பிரிவு மற்றும் மத்திய புலனாய்வு முகமைகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.