ஐதராபாத்தில் வாரச்சந்தை நடந்த சாலையில் திடீர் பள்ளம்-வைரலாகும் வீடியோ
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் கோஷ்மஹால் பகுதியில் உள்ள சக்னவாடியில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் வாரச்சந்தை நடந்தது. இதனால் சாலையோரத்தில் பலர் தள்ளுவண்டிகளில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால் கூட்டம் அங்கு அதிகம் காணப்பட்ட நிலையில், திடீரென சாலையில் நீண்டத்தூரத்திற்கு பள்ளம் ஒன்று ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டிகள், கார்கள், பைக் போன்ற இதர வாகனங்களும் பள்ளத்தில் விழுந்து சேதமடைந்தது. மேலும் 10ற்கும் மேற்பட்டோர் அந்த சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து காயமடைந்தனர். காயமடைந்தோரை அங்கிருந்தோர் மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு திடிரென்று அந்த சாலையில் பள்ளம் விழுந்ததை கண்டு அங்கிருந்தோர் பீதியடைந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்-வாகனங்களை மீட்டனர்
தகவலறிந்து அங்கு வந்த போலீசார் பள்ளத்தில் விழுந்த வாகனங்களை மீட்டு கொடுத்தனர். இது குறித்த முதற்கட்ட விசாரணையில் பள்ளம் விழுந்த அப்பகுதியில் பழமை வாய்ந்த கால்வாய் ஒன்று இருப்பதும், அதற்கு மேலேயே சிமெண்ட் ரோடு மற்றும் தார் ரோடுகள் போடப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த கால்வாயில் தொடர்ந்து கழிவுநீர் சென்று கொண்டிருந்ததால், பக்கவாட்டு சுவர் கற்களை கொண்டு கட்டப்பட்டிருந்த பட்சத்தில், கால்வாய் ஓரம் கழிவுநீர் சென்று மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் சாலை பிளவு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அந்த பள்ளம் விழுந்த இடத்தில் 3-4 மாடி கட்டிடங்கள் உள்ளதால் பாதிப்பு உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.