விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம்
ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியை சேர்ந்தவர் சரண். இவர் 2015 ஆம் ஆண்டு மாதவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் 40 வயதான சரணுக்கு விசாகபட்டிணத்தை சேர்ந்த 23 வயதான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணை மணக்க தனது மனைவி மாதவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கு விரும்பிய சரண், அதற்கான காரணத்தை தேடியுள்ளார். இதனையடுத்து அவர் தனது கர்ப்பிணி மனைவியை போலி மருத்துவர் ஒருவரிடம் அழைத்து சென்று எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ரத்தத்தை செலுத்தியுள்ளார். நாளடைவில் மாதவியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் கீழ் கைது செய்யப்பட்ட கொடூர கணவன்
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த பெண் இது குறித்து போலீசில் அளித்த புகாரில், தனது கணவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதையடுத்து அந்த பெண்ணை மணக்க தினந்தோறும் தன்னுடன் சண்டையிட்டதாகவும், தன்னிடம் இருந்து விவாகரத்து பெற, வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததோடு, தனக்கு ஆண் குழந்தை இல்லை என்று குறை கூறி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை ஏய்த்து சத்திற்காக ஊசி போடுவதாக கூறி அழைத்து சென்று எச்.ஐ.வி. பாதித்த ரத்தத்தை தனக்கு செலுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, இந்திய சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, சரணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மேற்கொண்டு வழங்க வேண்டிய மருத்துவ பரிசோதனைகளை எடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.