மக்களவை: தலித் அமைச்சரை தகுதியற்றவர் என்று டி.ஆர்.பாலு கூறியதாக குற்றச்சாட்டு
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, நிதி வழங்குவதில் தமிழகத்திற்கு எதிரான பாரபட்சம் குறித்த விவாதங்கள் முக்கிய இடத்தைப் பிடித்ததால், காரசாரமான விவாதம் நடைபெற்றது. தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதியில் குளறுபடிகள் இருப்பதாக திமுக எம்பி டிஆர் பாலு கவலை தெரிவித்தபோது பிரச்னை ஏற்பட்டது. குறிப்பாக மிக்ஜாம் புயலை அடுத்து, மாநிலத்திற்கு போதுமான ஆதரவை வழங்க மத்திய அரசு தவறிவிட்டதாக பாலு குற்றம் சாட்டினார். நிதி வழங்குவதில் பாரபட்சம் இல்லை என்றும், ஆனால் சிலர் தான் தூய்மை இல்லாத எண்ணத்தால் பிரிவினைவாத அரசியல் செய்கின்றனர் என்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறினார்.
மக்களவையில் என்ன நடந்தது?
புயலுக்கு முன்னதாக போதிய எச்சரிக்கையை அளிக்கத் தவறியதற்காக பாலு மத்திய அரசை விமர்சித்தபோது, மாநில அமைச்சர் எல் முருகன் அவரின் பேச்சை குறுக்கிட முயன்றார். அப்போது எரிச்சலடைந்த டி.ஆர்.பாலு, "குறுக்கே தலையிட வேண்டாம். எம்.பி.யாக இருக்க தகுதியற்றவர். அமைச்சராக இருக்க தகுதியற்றவர் நீங்கள்! உட்காருங்கள்!'' என்று எல்.முருகனை வசைபாடினார். டி.ஆர்.பாலுவின் இந்த கருத்து சட்டம் மற்றும் நீதி அமைச்சர் அர்ஜுன் மேக்வாலுக்கு பிடிக்கவில்லை. அவர் உடனடியாக எழுந்து பாலுவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினார். "எங்கள் அமைச்சரை நீங்கள் தகுதியற்றவர் என்று அழைக்க முடியாது. உங்கள் வார்த்தைகளை திரும்பப் பெறுங்கள்.. அவர்கள் இதை பதிவு செய்யாமல் நீக்க வேண்டும்" என்று மேக்வால் கூறினார்.
பாஜகவினர் சித்தரித்துப் பேசுகின்றனர் - டி.ஆர்.பாலு
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும், பாலுவை கண்டித்து, "அவரை எப்படி தகுதியற்றவர் என்கிறீர்கள்? திமுக அரசு லாயக்கற்றது, காங்கிரஸ் தகுதியற்றது, தலித் அமைச்சரை தகுதியற்றவர் என்று சொல்கிறீர்களா... ஒட்டுமொத்த எஸ்சி சமூகத்தையும் அவமதிக்கிறார்." என்று குற்றம்சாட்டினார். அதனை தொடர்ந்து, இரு தரப்பு உறுப்பினர்களும் குரல் எழுப்பியதால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. "டி.ஆர்.பாலு மன்னிப்பு கேள்" என்ற கூக்குரல் அறை முழுவதும் எதிரொலித்தது. இந்த அமளி குறித்து பேசி இருக்கும் டி.ஆர்.பாலு, தலித் அமைச்சரை அவமதித்து விட்டதாக பாஜகவினர் சித்தரித்துப் பேசுகின்றனர் என்று கூறியுள்ளார்.