
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 23ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்-முன் ஏற்பாடுகள் தீவிரம்
செய்தி முன்னோட்டம்
நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லால் செதுக்கப்பட்டு 18 அடி உயரத்தில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் அருள் பாலித்து வருகிறார்.
இங்கு வருடா வருடம் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி மிக கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி, இந்த வருடம் வரும் 23ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது.
இந்த விழாவில் நாமக்கல்லில் உள்ள மக்கள் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
இதனையொட்டி, அன்று காலை 5 மணியளவில் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலை சாத்தப்படவுள்ளது.
ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு
பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபாடு
இதற்காக வடை தயாரிக்கும் பணியானது கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் துவங்கப்பட்டு 4வது நாளான இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இப்பணியில் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் மடப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் தலைமையில் 32 பேர் கொண்ட ஈடுபட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
மேலும், தரிசன வசதி, பக்தர்கள் பாதுகாப்பு போன்ற பணிகளும், முன் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
இந்நிலையில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல்லில் முக்கிய சாலைகளான கோட்டை சாலை, பூங்கா சாலைகளில் நாளை மறுநாள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 500க்கும் மேற்பட்ட சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் ஏ.டி.எஸ். மணிமாறன் தலைமையில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களை தவிர்க்க ஈடுபடவுள்ளனர்.
ட்ரோன் கேமரா மூலமும் கூட்டத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.