பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹீரோ குரூப் கேப்டன் அபினந்தன் தனியார் விமான நிறுவனத்தில் இணைந்தார்
செய்தி முன்னோட்டம்
பாலகோட் வான்வழித் தாக்குதலின் போது, பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி புகழ் பெற்ற இந்திய விமானப்படையின் முன்னாள் குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான், கோவாவை தளமாக கொண்டு இயங்கும் 'FLY91' என்ற தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக இணைந்துள்ளார். 2019 பிப்ரவரியில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானின் போர் விமானத்தை, பழைய தலைமுறையைச் சேர்ந்த மிக்-21 பைசன் விமானம் மூலம் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தி சாதனை படைத்தவர் அபினந்தன். இந்தத் தாக்குதலின் போது இவரது விமானமும் சேதமடைந்ததால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிக்குள் பாராசூட் மூலம் தரையிறங்க நேரிட்டது. அங்கு பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இவர், 3 நாட்களுக்கு பிறகு இந்திய அரசின் கடும் தூதரக அழுத்தங்கள் காரணமாக விடுவிக்கப்பட்டார்.
ஓய்வு
விருதுகள் மற்றும் ஓய்வு
எதிரியின் எண்ணிக்கை பலத்தையும் பொருட்படுத்தாது காட்டிய தன்னிகரற்ற வீரத்திற்காக, இந்திய அரசின் உயரிய 'வீர் சக்ரா' விருது இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதன் பின்னர், விங் கமாண்டர் பதவியில் இருந்து 'குரூப் கேப்டன்' ஆகப் பதவி உயர்வு பெற்ற அபினந்தன், நடப்பு ஆண்டின் மார்ச் மாதத்தில் இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்றார்.
கடந்த 2024 மார்ச் மாதம் முதல் தனது வணிகரீதியிலான விமானச் சேவையைத் தொடங்கிய FLY91 நிறுவனம், தற்போது ATR 72-600 ரக விமானங்களைக் கொண்டு இயங்கி வருகிறது.
கடந்த மாதம் இந்த நிறுவனத்தில் சேர்ந்த 43 வயதான அபினந்தனின் பணி விவரங்கள் குறித்த தகவல்கள் இல்லை. அவரின் இந்த புதிய பயணம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.