இனி கிராஜுவிட்டி பெற 5 ஆண்டுகள் தேவையில்லை; புதிய தொழிலாளர் சட்டத்தில் ஒரு ஆண்டாகக் குறைப்பு
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, நிரந்தரமல்லாத நிலையான கால ஊழியர்கள் (Fixed-Term Employees) கிராஜூவிட்டி (Gratuity) பெறுவதற்கான குறைந்தபட்ச சேவைக்காலம் ஐந்து ஆண்டுகளில் இருந்து ஓராண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) அறிவிக்கப்பட்ட இந்த மாற்றம், 29 பழமையான தொழிலாளர் சட்டங்களைத் தொகுத்து உருவாக்கப்பட்ட நான்கு புதிய தொழிலாளர் குறியீடுகளின் ஒரு பகுதியாகும். கிராஜூவிட்டி கொடுப்பனவுச் சட்டத்தின் முந்தைய விதிகளின்படி, நிலையான கால ஊழியர்கள் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய பிறகே இந்தக் கிராஜுவிட்டி பலனைப் பெறத் தகுதி பெற்றனர். புதிய சட்டங்களின் கீழ் இந்த நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது.
நோக்கம்
விதியை தளர்த்தியதன் நோக்கம்
இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம், நிலையான கால ஊழியர்களையும் நிரந்தர ஊழியர்களுக்கு இணையாகக் கருதுவதாகும். அதாவது, இதன் மூலம் நிரந்தமல்லாத பணியில் இருப்பவர்களும் நிரந்தரப் பணியாளர்களுக்குக் கிடைக்கும் அதே சம்பள அமைப்பு, விடுப்புச் சலுகைகள், மருத்துவப் பலன்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புக் காப்பீடு ஆகியவற்றைப் பெறுவார்கள். இது நேரடி வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதுடன், அதிகப்படியான ஒப்பந்த முறையைக் குறைக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது.
ஸ்திரத்தன்மை
தொழிலாளர்களுக்கு நிதி ஸ்திரத்தன்மை
நீண்ட கால சேவைக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில், முதலாளியால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மொத்தப் பணம் தான் கிராஜுவிட்டி ஆகும். பாரம்பரியமாக, ஐந்து ஆண்டுகள் கட்டாயச் சேவைக்குப் பிறகு ராஜினாமா அல்லது ஓய்வுபெறும் போது ஊழியர்கள் அதைப் பெறுவார்கள். புதிய விதிகள் மூலம், நிலையான கால ஊழியர்கள் இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதில்லை. இந்தக் குறைந்தபட்சத் தகுதிக்காலம், பணி மாற்றத்தின்போது ஊழியர்களுக்கு வலுவான நிதி ஸ்திரத்தன்மையை வழங்கும் என்று அரசு கருதுகிறது.