தொலைக்காட்சி சேனல்களுக்கு இனி அன்லிமிடெட் விளம்பரம்! 12 நிமிட நேரக் கட்டுப்பாட்டை நீக்கிய மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
தொலைக்காட்சி சேனல்களில் விளம்பரம் ஒளிபரப்ப விதிக்கப்பட்டிருந்த 12 நிமிட நேரக் கட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நியாயமான போட்டியையும், தொழில் செய்வதை எளிதாக்குவதையும் உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் விதிகள் 1994ல் செய்யப்படும் திருத்தங்கள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி சூழல்
டிஜிட்டல் ஊடகங்களுக்கு இணையான போட்டி சூழல் உருவாக்கம்
இந்தியாவில் கட்டண சேனல்கள் மற்றும் இலவச சேனல்கள் என அனைத்துமே பெருமளவில் விளம்பர வருவாயையே நம்பி இயங்கி வருகின்றன.
இந்நிலையில் எந்தவொரு விளம்பர நேரக் கட்டுப்பாடும் இல்லாத டிஜிட்டல் ஊடகங்களுடன் ஒப்பிடும்போது, பாரம்பரியத் தொலைக்காட்சி சேனல்களுக்கு சமமான வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.
மேலும் தொலைக்காட்சித் துறைக்குள்ளும், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு இடையேயும் தற்போது போதிய போட்டி நிலவுவதால், இந்த காலவரையறை கட்டுப்பாட்டை முழுமையாக நீக்க அரசு முடிவு செய்துள்ளது.
2006 விதி
2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பழமையான விதிகளின் பின்னணி
கடந்த 2006 ஆம் ஆண்டில் வெறும் 62 தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே இருந்த காலத்தில் இந்த 12 நிமிட விளம்பரக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது.
அப்போது கேபிள் டிவி சேவை அனலாக் முறையில் குறைந்த அலைவரிசை வசதியுடன் மட்டுமே செயல்பட்டதால் நுகர்வோருக்கு மிகக் குறைந்த தேர்வுகளே இருந்தன.
ஆனால் தற்போது 900க்கும் மேற்பட்ட சேனல்கள் இயங்கி வருகின்றன.
கேபிள் டிவி துறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, டிடிஎச் மற்றும் ஐபிடிவி தளங்கள் மூலம் 500க்கும் மேற்பட்ட சேனல்கள் மக்களுக்குக் கிடைக்கின்றன.
மாற்றங்கள்
தொலைக்காட்சி அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் புதிய முடிவு
சந்தையின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் விநியோகத் தளங்கள் தற்போது விரிவடைந்துள்ளதால், நுகர்வோருக்கு ஏராளமான சேனல்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சந்தை நிலவரங்களில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, விளம்பர நேர வரம்பு தொடர்பான பழைய விதிகளை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இதன் காரணமாகவே 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த 12 நிமிட விளம்பரக் கட்டுப்பாட்டை முழுமையாக நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.