உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குக்கு அரசு மரியாதை வழங்கப்படும்- மு.க.ஸ்டாலின்
உடல் உறுப்பு தானம் செய்வோர்களுக்கு இனி இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு மறு பிறவி கொடுக்கும் புனிதமான பணி தான் உடல் உறுப்பு தானம். இதில் தமிழகம் தொடர்ந்து முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், தங்கள் குடும்ப உறுப்பினர் மூளை சாவு அடைந்த துயரமான நிலையிலும், இறந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வருகின்றனர். அவர்களின் இந்த இணையில்லா தியாக மனப்பான்மை காரணமாக தான் தமிழ்நாடு இதில் சாதனை படைக்க முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இயக்கம்
இந்நிலையில், தற்போது முதல்வர் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களை காப்பாற்றும் அவர்களது தியாகத்தினை போற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானம் செய்வோர் தங்கள் இறப்பிற்கு முன் தானம் செய்திருந்தால் அவர்களது இறுதிச்சடங்கு அரசு மரியாதையோடு நடைபெறும் என்று அறிவித்துள்ளார். முன்னதாக, மு.க.ஸ்டாலின் 2009ம் ஆண்டு துணை முதல்வராக செயல்பட்டு வந்த நிலையில், உடல் உறுப்பு தானம் குறித்து மியாட் மருத்துவமனையோடு இணைந்து உடல் உறுப்பு தானம் குறித்த முக்கியத்துவத்தினை அறிவுறுத்தி விழிப்புணர்வு இயக்கத்தினை துவங்கினார் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.