ராமேஸ்வரம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம்-காணொளி காட்சி மூலம் துவக்கி வைப்பு
காசிக்கு அடுத்தபடியாக புண்ணிய ஸ்தலமாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் 12 ஜோதிடர் லிங்கத்தில் ஒன்றை கொண்டது. இது போல் மதுரையில் உள்ள மீனாட்சியம்மன் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலும் மிக பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் இந்த மூன்று கோயில்களிலும் முழு நேர அன்னதானம் என்னும் திட்டத்தை தமிழக முதல்வர் துவக்கி வைக்கப்பபோவதாக சமீபத்தில் கூறியிருந்தார். அதன்படி, இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தப்படியே காணொளி காட்சி வாயிலாக மதுரை, திருவண்ணாமலை மற்றும் ராமேஸ்வரம் கோயிலில் முழு நேர அன்னதான திட்டத்தை துவக்கி வைத்தார்.
மேசை, நாற்காலியை கோயில் நிர்வாகம் குறைத்ததால் பக்தர்கள் சாப்பிட காத்திருப்பு
இந்நிகழ்ச்சியானது தெற்கு கோபுரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த காணொளி காட்சி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், கோயில் நிர்வாக அலுவலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் துவக்கத்தில் 400 பேர் அமர்ந்து சாப்பிடும்படி, மேசை, நாற்காலி போடப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், நிகழ்ச்சி முடிந்து ஆட்சியர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கிளம்பிய பின்னர், 200 மேசை, நாற்காலியாக எண்ணிக்கையை கோயில் நிர்வாகம் குறைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மண்டபத்தில் பல மணி நேரம் ஏராளமான பக்தர்கள் சாப்பிட காத்திருந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.