பேரிடருக்கு பின் இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நான்கு மடங்கு அதிகரிப்பு-கிஷன் ரெட்டி
ஜி 20 மாநாட்டின் ஒரு பகுதியாக குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச்சில் உள்ள டென்ட் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலா பணிக்குழு கூட்டத்தில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உரையாற்றினார். அப்போது அவர் இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு பின்னர் வெளிநாட்டினர் வருகை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறினார். இதனை தொடர்ந்து அவர் பேசுகையில், சுற்றுலாத்துறையை மிஷன் முறையில் டிஜிட்டல் மயமாக்க உறுதி செய்வதற்கான தேசிய சுற்றுலா திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுநோய் பரவிய காலகட்டத்தில் உலக நாடுகள் மிக கடினமான காலங்களை எதிர்கொண்டது. முக்கியமாக சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என பெருமிதம்
மேலும் அவர் பேசுகையில், கொரோனா பரவல் காலமான இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு 2022ல் மட்டும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு 6.9 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, இந்தியாவிற்கு வருபவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு சுற்றுலாத்துறையில் நெகிழ்ச்சியான வளர்ச்சியை அடைவதற்கான எங்கள் முயற்சிகள் சரியான திசையில் முன்னேறி வருகிறது என்பதற்கு சான்றாக உள்ளது என்று அவர் பெருமிதத்தோடு பேசியது குறிப்பிடத்தக்கது.