பீகார் முதல்வராக 10-வது முறையாக பதவியேற்கிறார் நிதிஷ் குமார்: பிரதமர் மோடி பங்கேற்பு
செய்தி முன்னோட்டம்
பீகார் மாநிலத்தின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் (JDU) தலைவர் நிதிஷ் குமார், இன்று பதவி ஏற்கிறார். வரலாற்று சாதனையாக 10-வது முறையாக அவர் பீகாரின் முதலைவராக பதவியேற்க உள்ளார். பாட்னாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் காலை 11:30 மணியளவில் இந்த பிரம்மாண்ட விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களில் வென்று அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவை
துணை முதல்வர்கள் மற்றும் அமைச்சரவை
நிதிஷ் குமாருடன், சம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் மீண்டும் துணை முதல்வர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளது. புதிய அமைச்சரவையில் பாஜக சார்பில் 16 பேரும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 14 பேரும் இடம்பெறக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. பிரதமர் உள்ளிட்ட விவிஐபி-க்கள் (VVIPs) பங்கேற்பதால், காந்தி மைதானத்தைச் சுற்றி 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டிரோன் கேமராக்கள் மற்றும் உயரமான கட்டடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விழாவின் மூலம் பீகாரில் மீண்டும் ஒருமுறை என்.டி.ஏ (NDA) ஆட்சி மலர்கிறது.