திருவனந்தபுரத்தில் இன்று 5 மணி நேரத்திற்கு விமான சேவைகள் நிறுத்தம்: காரணம் என்ன?
ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் பாரம்பரிய ஆராட்டு ஊர்வலம் இன்று நடைபெற இருப்பதால், திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் ஐந்து மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று TIAL தெரிவித்துள்ளது. பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள இந்த ஆராட்டு ஊர்வலம், திருவாங்கூர் அரசர்கள் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் அல்பசி ஆராட்டு ஊர்வலத்தை எளிதாக்கும் வகையில், இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை விமான சேவைகள் நிறுத்தப்படும் என திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலைய லிமிடெட்(TIAL) தெரிவித்துள்ளது. இந்த விழாவையொட்டி நான்கு விமானங்களின் சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கபட்ட பாரமப்பரியம்
ஆராட்டு ஊர்வலம் கோவிலுக்கு திரும்பியதும், விமானங்கள் ஓடும் தார்ச்சாலை சுத்தம் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு அதன் பின்னரே விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படும். இந்த ஊர்வலம் விமான ஓடுபாதை வழியாக செல்ல, பல தசாப்தங்களாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை விமான சேவைகளை இடைநிறுத்தி வருகிறது திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம். சுவாமி சிலைகளை புனித நீராடுவதற்காக சங்குமுகம் கடற்கரைக்கு எடுத்து செல்லும் இந்த கோயில் ஊர்வலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கபட்டதாகும். எனவே, 1932இல் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் நிறுவப்பட்ட பின்னரும் இந்த பாரம்பரியமான ஊர்வலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.