அம்ரித்பால் விவகாரம்: ஏப்ரல் 14 வரை காவல்துறையினரின் விடுமுறை ரத்து
செய்தி முன்னோட்டம்
அம்ரித்பால் சிங் பிரச்சனை காரணமாக பஞ்சாப் காவல்துறையினரின் விடுமுறை ஏப்ரல் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பைசாகி அன்று காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விடுமோ என்ற காரணத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அம்ரித்பால், பைசாகி அன்று சீக்கியர்களின் கூட்டமான சர்பத் கல்சாவை நடத்துமாறு அகல் தக்த்திடம்(உயர் சீக்கிய மத அமைப்பு) கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பைசாகி என்பது 'தை பொங்கல்' போல சீக்கியர்கள் கொண்டாடும் ஒரு தினமாகும். இது இந்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
இந்த தினத்தன்று சீக்கியர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று அம்ரித்பால், அகல் தக்த்திடம் ஒரு வீடியோ மூலம் வலியுறுத்தி இருந்தார்.
இந்தியா
இதுவரை வரலாற்றில் இரண்டு முறை மட்டுமே நடத்தப்பட்ட சர்பத் கல்சா
ஆனால், உயர் குருத்வாரா அமைப்பான ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி(SGPC), சர்பத் கல்சாவை நடத்துவதா என்பதை அகல் தக்த் மட்டுமே முடிவு செய்யமுடியும் என்று கூறியுள்ளது.
சர்பத் கல்சா என்பது சீக்கிய சமூகத்தின் நீண்டகால எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சபையாகும்.
1986 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் மட்டுமே இதற்கு முன் சர்பத் கல்சா நடத்தப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள சீக்கியக் குழுக்கள் ஒரு நடைமுறையைப் பின்பற்றுவதால், இந்த நிகழ்வை ஒருங்கிணைக்க சில மாதங்கள் தேவைப்படும்.
பஞ்சாப் போலீஸார், அம்ரித்பாலை பிடிக்க மார்ச் 18ஆம் தேதி முதல் முயற்சித்து வருகின்றனர்.
அம்ரித்பால் பாகிஸ்தான் ஏஜென்டாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்(NSA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.