'குடும்பத்தால், குடும்பத்திற்காக': எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி
அந்தமான் போர்ட் பிளேயரில் உள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தை வீடியோ கால் மூலமாக பிரதமர் மோடி இன்று(ஜூலை 18) திறந்து வைத்தார். விமான நிலையத்தை திறந்து வைத்த பிறகு உரையாற்றிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடியுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று பெங்களூரில் நடைபெறுகிறது. 2024ஆம் ஆண்டு பொது தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் அங்கு கூட்டியுள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி தனது உரையின் போது, "நீங்கள் அனைவரும் இந்த புதிய கும்பலை(எதிர்க்கட்சிகள்) பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு முதன்மையானது அவர்களது குடும்பம் மட்டும்தான். தேசம் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. ஊழலே அவர்களின் உந்துதலாக இருக்கிறது." என்று பேசி இருக்கிறார்.
பிரதமர் மோடி தனது உரையின் போது மேலும் கூறியதாவது:
எவ்வளவு பெரிய ஊழல் செய்திருக்கிறார்களோ அவ்வளவு பெரிய பதவியில் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். 'மக்களால், மக்களுக்காக' இயங்குவது தான் தேசம் என்கிறது அரசியலமைப்பு. ஆனால், இந்த எதிர்க்கட்சிகள் கூட்டம், 'குடும்பத்தால், குடுமபத்திற்காக' இயங்கிக் கொண்டிருக்கிறது. முன்னேற்றத்தை தடுத்து ஊழலை பெரிதுபடுத்துவது தான் எதிர்க்கட்சிகளின் ஒரே நோக்கமாக இருக்கிறது. மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலின் போது நடந்த வன்முறையை ஒட்டுமொத்த தேசமும் பார்த்தது. ஆனால், அந்த கும்பல்(எதிர்க்கட்சிகள்) அதை கண்டுகொள்ளாமல், அமைதி காத்து கொண்டிருக்கிறது. இந்தக் கும்பலில் உள்ள ஒருவர் மற்றவரின் தவறுகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல், ஊழல் மற்றும் மோசடிகளில் இந்த கட்சிகள் சிக்கும்போது, பாதிக்கப்பட்டவர்கள் போல் நடித்து, "எங்களை குறிவைக்கிறார்கள்" என்று அவர்கள் புலம்புகிறார்கள்.