
கள்ளச்சாராய விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது
செய்தி முன்னோட்டம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள வம்பாமேடு பகுதியினை சேர்ந்தவர் அமரன்(25), இவர் கள்ளச்சாராய வியாபாரம் செய்து வந்துள்ளார்.
கடந்த 13ம் தேதி எக்கியர்குப்பம் மீனவர் பகுதியினை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இவரிடம் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளார்கள்.
அந்த சாராயத்தினை குடித்த சில மணி நேரங்களிலேயே வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் போன்றவைகள் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்றைய நிலவரப்படி 14பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து முண்டியம்பாக்கம் மற்றும் மரக்காணம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் 52 பேர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
கைது
8 பேரின் வாக்குமூலம்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
இந்நிலையில் நேற்று(மே.,16) இரவு இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கெமிக்கல் பேக்டரி உரிமையாளரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளார்கள்.
சென்னை வானகரம் மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள விநாயகா எண்டர்ப்ரைசஸ் என்னும் கெமிக்கல் பேக்டரியினை மதுரவாயல் பகுதியினை சேர்ந்த இளையநம்பி என்பவர் நடத்தி வந்துள்ளார்.
இவரை கைது செய்ய ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் மிக துரிதமாக செயல்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
முன்னதாக இந்த வழக்கில் கைதான 8 பேரும் இளையநம்பியிடமிருந்து 600 லிட்டர் மெத்தனால் வாங்கியதாக காவல்துறையின் விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளார்கள்.
அதன் அடிப்படையிலேயே காவல்துறையினர் இவரை கைது செய்து காஞ்சிபுரம் அழைத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.