தமிழக அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்கள் பணிக்காலம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
தமிழக அரசு பள்ளிகளில் அவ்வப்பொழுது தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவ்வப்போது அரசு பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் அரசு மேற்கண்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களுக்கு எவ்வித படிப்பு சார்ந்த பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் கல்வி முடித்தவர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வு நடத்தி நிரந்தர ஆசிரியர்களை அரசு நியமனம் செய்யும் வரை இந்த தற்காலிக ஆசிரியர்கள் தொடர்ந்து பணியில் நீடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
912 தற்காலிக ஆசிரியர்கள் பணிக்காலம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
அண்மையில் தற்காலிக ஆசிரியர்கள் சம்பள உயர்வு, பணி நியமனம் போன்ற கோரிக்கைகளை முன் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அரசு அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடிவு செய்து, அதற்கான நிதியாக ரூ.109 கோடியை விடுவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3 மாதக்காலம் பணி நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 912 ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்கள் என்றும், அவர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.