'கழகத்தில் பயணிக்க மனம் இடம் கொடுக்கவில்லை': திமுகவுக்கு குட்-பை சொன்ன தோப்பு வெங்கடாச்சலம்
செய்தி முன்னோட்டம்
கொங்கு மண்டலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் வருவாய்த்துறை அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள விலகல் கடிதத்தில், "கழகத்தில் தொடர்ந்து பயணிக்க எனது மனம் இடம் கொடுக்காததால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
பின்னணி
விலகலுக்கான முக்கிய காரணங்கள்
ஈரோடு மாவட்ட திமுக மூத்த தலைவர்களுடனான கருத்து வேறுபாடு மற்றும் தேர்தலில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரோடு மத்திய மாவட்டப் பொறுப்பாளர் பதவியில் இருந்து தோப்பு வெங்கடாச்சலம் சமீபத்தில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதிமுகவில் 2011-ஆம் ஆண்டு பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஜெயலலிதா அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றினார்.
பின்னர் 2021-ல் திமுகவில் இணைந்தார்.
தற்போது எந்த கட்சியிலும் உடனே இணையப் போவதில்லை என்றும், ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை குறித்து முடிவெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.