புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம்
செய்தி முன்னோட்டம்
மாநிலங்களின் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் பொழுது, சொந்த மாநிலம் விட்டு வேறு மாநிலங்களுக்கு சென்று வேலை செய்து வருபவர்கள் வாக்களிக்க தங்கள் சொந்த மாநிலத்திற்கு கூட்டம் கூட்டமாக செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது.
இக்காரணத்தினால் சிலர் வாக்களிப்பதை தவிர்த்தும் விடுகிறார்கள்.
இதனை மாற்றும் வகையில், பணி செய்யும் மாநிலங்களில் இருந்தபடியே, தங்களது சொந்த ஊர் வாக்காளர் அட்டை கொண்டு வாக்களிக்க வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
இதில் ஐஐடி உள்ளிட்ட நிறுவனங்களும் பங்கேற்றனர். இதனையடுத்து 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனவரி 31ம் தேதிக்குள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய உத்தரவு
அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்
இந்த இயந்திரம் மூலம் ஒரே வாக்குச்சாவடியில் இருந்து அதிகபட்சம் 72 தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் தங்கள் தொகுதி வேட்பாளர்களுக்கு தங்கள் வாக்கினை பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து வரும் ஜனவரி 16ம் தேதி அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து, அதற்கான அழைப்பையும் விடுத்துள்ளது.
இந்த கூட்டத்தில் இந்த 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' குறித்த செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்த தங்களது தனிப்பட்ட கருத்துக்களையும் அரசியல் கட்சிகள் ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.