அதிமுக அவை தலைவராக தமிழ் மகன் உசேனை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என இருவரும் இரு அணிகளாக பிரிந்து தனித்தனி வேட்பாளர்களை அறிவித்தனர். எனவே, அதிமுக'வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுக்கள் வலம் வந்தநிலையில், இதுகுறித்து ஈ.பி.எஸ். தரப்பில் அளிக்கப்பட்ட இடையீட்டு மனுகுறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தது. இதனையடுத்து, இந்த விவகாரத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பினை அளித்தது. ஓ.பி.எஸ். தரப்பினரையும் உள்ளடக்கிய பொதுக்குழு நடத்தப்பட்டு, வாக்கு அடிப்படையில் அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு தேர்தெடுக்கப்படும் வேட்பாளர் தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்மகன் உசேன் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
குறுகிய காலத்திற்கு அதிமுக அவைத்தலைவராக இருக்க அங்கீகாரம்
இதனையடுத்து அண்மையில் பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த தகவல்களை தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தார். இதனையடுத்து அதிமுக வேட்பாளருக்கான ஏபி படிவங்களில் கையெழுத்திட அவைத்தலைவருக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. அதன்படி, குறுகிய காலத்திற்கு அதிமுக அவை தலைவராக தமிழ்மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றினையும் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் மூலம் ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் உறுதியாகியுள்ளது. முன்னதாக, திடீர் திருப்பமாக ஓ.பி.எஸ்.அணியின் மூத்த தலைவர்களான கு.ப.கிருஷ்ணன், வைத்திலிங்கம் ஆகியோர் இந்த இடைத்தேர்தலில் இரட்டைஇலை சின்னம் வெற்றி பெறுவதற்காக வேட்பாளர் செந்தில்முருகனை வாபஸ் பெறுவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடவேண்டியவை.