Loading...
2027 மார்ச் வரை நீடிக்கும் சூப்பர் எல் நினோ! தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு வறட்சி அபாயம்
தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு வறட்சி அபாயம்

2027 மார்ச் வரை நீடிக்கும் சூப்பர் எல் நினோ! தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு வறட்சி அபாயம்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 18, 2026
05:51 pm

செய்தி முன்னோட்டம்

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள எல் நினோ கடல் வெப்பநிலை மாற்றம், வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிப்பதற்கு 98 சதவீதம் வாய்ப்புகள் உள்ளதாக இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம் (INCOIS) எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஜூன் மாதமே தொடங்கிவிட்ட இந்த எல் நினோ தாக்கம், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மேலும் தீவிரமடையும் என உலக வானிலை அமைப்பு கணித்துள்ளது. இதனால் நடப்பு தென்மேற்கு பருவமழை, வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை மற்றும் குளிர்காலம் என மூன்று பருவங்களிலும் மிகப்பெரிய தலைகீழ் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

27 மாநிலங்கள்

தமிழகத்தின் 12 மாவட்டங்கள் உட்பட 27 மாநிலங்களுக்கு வறட்சி எச்சரிக்கை

மத்திய அரசு விடுத்துள்ள புதிய அவசர எச்சரிக்கையின்படி, இந்த எல் நினோ தாக்கத்தால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 27 மாநிலங்களை சேர்ந்த 226 மாவட்டங்களில் பருவமழை பெருமளவில் குறைந்து கடும் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் பின்வரும் 12 மாவட்டங்கள் வறட்சியால் நேரடியாகப் பாதிக்கப்படலாம் என மத்திய அரசு அடையாளப்படுத்தியுள்ளது:

தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் நீலகிரி.

விவசாயத்திற்கு அச்சுறுத்தல்

விவசாய அச்சுறுத்தலும் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு அபாயமும்

அரபிக்கடலிலிருந்து வரும் ஈரப்பத காற்றை இந்த எல் நினோ தடுத்து வறண்ட சூழலை உருவாக்குவதால், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடுமையான வெப்ப அலையும், சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான புழுக்கமும் நீடிக்கிறது.

கர்நாடகாவில் ஜூன் மாத தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து குறைந்து, மேட்டூர் அணை திறப்பில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு, அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்து சந்தையில் அவற்றின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னை

சென்னைக்கு பெருமழை வருமா? வரலாற்றுத் தரவுகள் கூறும் உண்மை!

வரலாற்றுத் தரவுகளின்படி, 1987க்குப் பிறகு வந்த 9 எல் நினோ ஆண்டுகளில், 8 ஆண்டுகளில் சென்னையில் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போயுள்ளது.

சென்னைக்கு கிடைக்க வேண்டிய சராசரி 44 சென்டிமீட்டர் மழை இந்த காலங்களில் கிடைக்கவில்லை.

சென்னையின் 60% ஆண்டு மழைத்தேவை வடகிழக்கு பருவமழை மூலமே பூர்த்தியாகிறது.

எனினும் தமிழகத்தில் பெருமழை பதிவான 1997, 2015 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகள் மிக வலுவான எல் நினோ ஆண்டுகளேயாகும் என்பதால் சென்னைக்கு பெருமழைக்கான சாதகக்கூறுகள் அதிகமாகவே உள்ளன.

ADVERTISEMENT

மீனவர்கள்

மீனவர்களின் வாழ்வாதாரப் பாதிப்பும் புயல் சின்னங்களின் முக்கியத்துவமும்

மழையின் ஒட்டுமொத்த அளவு எல் நினோவை மட்டுமே சார்ந்திருக்காமல், அந்தந்த காலகட்டங்களில் வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னங்களைப் பொறுத்தே இறுதியாக முடிவாகும் என வானிலை நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும், இந்த காலநிலை மாற்றத்தால் கடலோரப் பகுதிகளில் மீன்களின் நடமாட்டம் மற்றும் அவற்றின் இனப்பெருக்க சுழற்சி மாறுபடும் என்பதால், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படலாம்.

எல் நினோவின் இந்தத் தீவிரத் தாக்கம் எவ்வாறு மாறுகிறது என்பது அடுத்த சில வாரங்களில் இன்னும் தெளிவாகத் தெரியவரும்.

ADVERTISEMENT