திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி மலையேற பக்தர்களுக்கு தடை; என்ன காரணம்?
திருவண்ணாமலையில் கடந்த 1ஆம் தேதி பெய்த கனமழையால் தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உலக பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருவிழா அன்று திருவண்ணாமலை உச்சியில் பக்தர்கள் ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 13 ஆம் தேதி மாலை திருவண்ணாமலை தீப மலையில் 2668 அடி உயரத்தில் மகா தீபம் ஏற்றப்படும். கடந்த 2 ஆண்டுகளாக, உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2500 பக்தர்கள் மலையேறி மகா தீபத்தை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக ஆய்வு குழு அறிக்கை
இந்த மாதம் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவின் தொடர்ச்சியாக, புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தபோது, தீப மலையில் 500 மீட்டர் தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், கொப்பரை எடுத்துச் செல்லும் வழியிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மகா தீபத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்தார். மேலும், கோவிலுக்குள் ஏற்றப்படும் பரணி தீபத்திற்கு 300 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். இந்த கார்த்திகை தீப திருவிழாவில் 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.