டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல்
தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் கார் சக்கரத்தில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் விவகாரமாக உருவெடுத்தது. இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி காவல் துறைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து போலீசார் இது குறித்த விசாரணையில் ஈடுபட்டு தற்போது சில தகவல்களை தெரிவித்துள்ளார்கள். சம்பவம் நடந்த அன்று, டெல்லி போலீசாருக்கு அதிகாலை வந்த முதல் அழைப்பை வைத்து பெண்ணை இழுத்துச்செல்லும் காரை தேடி வந்தனர். அதன்பின்னர், வந்த அழைப்பில் இளம்பெண் சடலமாக இருப்பதாக கூறியதையடுத்து, உடலை கைப்பற்றினர். மேலும் காரை பறிமுதல் செய்து அதிலிருந்த 5 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
பலியான பெண்ணுடன் இன்னொரு பெண்ணும் பயணம் செய்துள்ளதாக போலீசார் தகவல்
இந்நிலையில், அந்த காரை தீபக் கண்ணா என்பவர் டிசம்பர் 31ம் தேதி இரவல் வாங்கி, தனது 4 நண்பர்களை அதில் ஏற்றிக்கொண்டு ஹரியானா சென்றுள்ளார். அப்போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலியான இளம்பெண் தனியாக இருசக்கர வாகனத்தில் பயணிக்கவில்லை என்னும் புது தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, விபத்தில் பலியான அஞ்சலியுடன் இன்னொரு பெண்ணும் பயணம் செய்துள்ளார், அவருக்கும் விபத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் சுதாரித்து கொண்ட அப்பெண் வீட்டிற்கு சென்றுள்ளார், ஆனால் அஞ்சலியின் கால் கார் சக்கரத்தில் சிக்கியதால் அவரால் தப்பிக்க முடியாமல், இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்த பல சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், இது தெரியவந்தது என்று போலீசார் தெரிவித்துள்ளார்கள்.