டெல்லி துப்பாக்கிச்சூடு சர்ச்சை: ராகுல் காந்தி தர்ணா போராட்டத்திற்குப் பிறகு டெல்லி போலீஸ் FIR பதிவு
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது பெல்லட் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த 19 வயது இளைஞருக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தீவிர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, டெல்லி காவல்துறை அடையாளம் தெரியாத நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. கடந்த ஜூலை 20ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்தியதாக கூறப்படும் பெல்லட் துப்பாக்கிச் சூட்டில் சாஹில் லோச்சப் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய கோரி ராகுல், பாதிக்கப்பட்ட இளைஞருடன் சென்று காவல் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
வலியுறுத்தல்
FIR பதிவு செய்ய வலியுறுத்தல்
பாதிக்கப்பட்ட இளைஞரின் உடலில் 200-க்கும் மேற்பட்ட பெல்லட் குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும், கண் மற்றும் வயிற்று பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே ஆகஸ்ட் 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் புகார் அளித்தும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
ராகுல் காந்தியின் போராட்டத்தைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
இருப்பினும், இச்சம்பவத்தில் எந்த தனிநபரின் பெயரும் குற்றவாளியாக குறிப்பிடப்படவில்லை.
அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய காங்கிரஸ், இதற்கான நீதியை உறுதி செய்யும் வரை குரல் கொடுப்போம் எனத் தெரிவித்துள்ளது.