கடலில் கச்சா எண்ணெய் கசிந்த விவகாரம் குறித்து சிபிசிஎல் நிறுவனம் விளக்கம்
செய்தி முன்னோட்டம்
சென்னை மாநகரில் மிக்ஜாம் புயல் தாக்கம் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது.
இப்புயலின் பொழுது சென்னை எண்ணூர் பகுதியில் கொசஸ்தலையாற்றில் சிபிசிஎல் ஆலையிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி பரவியுள்ளது.
இந்திய கடற்படை ஹெலிகாப்டர் கொண்டு நடத்திய ஆய்வில் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்திலிருந்து காசிமேடு துறைமுகம் வரையில் சுமார் 20-சதுர கி.மீ.,பரப்பளவிற்கு கச்சா எண்ணெய் பரவியுள்ளது என்பது தெரியவந்தது.
இந்த எண்ணெய் பரவல் சுற்றுச்சூழல் மற்றும் மீன்கள் இனப்பெருக்கத்திற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதுகுறித்த விசாரணை நேற்று(டிச.,12)நடந்த நிலையில், கச்சா எண்ணெய் அகற்றும் பணியினை தீவிரப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் கசிந்தது குறித்து சிபிசிஎல் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
விளக்கம்
60 படகுகளில் 125 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அதன்படி, மிக்ஜம் புயலால் சென்னையில் 36-மணிநேரம் இடைவிடாத கனமழை பெய்தது.
இதனால் சுத்திகரிப்பு நிலையத்தில் வெள்ளம் ஏற்பட்டது.
வரலாறுக்காணாத இந்த வெள்ளம் சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவுநீர் அமைப்புடன் கலந்தது என்று கூறியுள்ளது.
மேலும் வெள்ளத்தால் சுத்திகரிப்பு ஆலை குழாய்களில் கசிவு இல்லை என்று கூறியுள்ள நிறுவனம்,
மாசு கட்டுப்பாடு வாரிய அறிவுறுத்தல்படி கச்சா எண்ணெய்யை அகற்ற உரிய கருவிகள் பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறியுள்ளது.
மாநிலஅரசு வழிகாட்டுதல்படி 24-மணிநேர கண்காணிப்புடன் பணிகள் நடக்கிறது என்று கூறியுள்ள நிறுவனம்,
மிதவைகள் கொண்டு எண்ணெய் பரவல் தடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
எண்ணெய் அகற்றும் இப்பணியில் 60 படகுகளில் 125 பேர் ஈடுபட்டுள்ள நிலையில், பாதிப்படைந்த வீடுகளை சுத்தம் செய்யும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.