கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் 2வது அலையாக மீண்டும் கொரோனா பரவ துவங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பது குறித்து பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். மீண்டும் அதிகரிக்கும் பொருட்டு, பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனையடுத்து இன்று(மார்ச்.,16) முதல் கோவை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள துவங்கியுள்ளனர். முன்னதாக நேற்று முன்தினம் பாதிப்பு அதிகமுள்ளதாக கூறப்பட்ட பகுதிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரோடு தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 462 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தல்
பரிசோதனை மேற்கொண்டதன் முடிவுகள் நேற்று(மார்ச்.,15) மாலை வெளியானது. அதன்படி தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு கோவையில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,41,323ஆக அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி கோவையில் கொரோனா பாதிப்போடு 68 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதே போல் நேற்றைய நிலவரப்படி சென்னையில் 57 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் கடந்த வாரம் ஒரு இளைஞர் கொரோனா தொற்றால் மரணமடைந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.