இந்திய மீனவர்கள் எல்லைத்தாண்டி வந்தால் கடலில் ஆர்ப்பாட்டம் செய்யுமாறு இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு
தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை போன்ற கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக வைத்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த மீன்படி தொழிலில் தமிழக மீனவர்கள் பெரும் சிரமத்தை வெகுநாட்களாக சந்தித்து வருவது நாம் அறிந்த விஷயமே. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படை இவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய மீனவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
இலங்கை வடபகுதி மீனவர்களுக்கு வழங்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்
கிளிநொச்சியில் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட இவர் கூறியதாவது, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் பொழுது, அது வேறு விதமாக பார்க்கப்படுகிறது. இதனால் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களுக்கு எதிராக கடலிலேயே ஆர்ப்பாட்டம் செய்ய இலங்கை மீனவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்படும் இந்திய மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்கும் பொழுது, அதனை இலங்கை வடபகுதி மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.