நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள்
கொரோனா கால நெருக்கடியில் எந்த விதிமுறைகளும் சரிவர மேற்கொள்ளாமல் 2300 தற்காலிக செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். இவர்களது பணி காலம் கடந்த டிசம்பர் 31ம் தேதியோடு முடிவடைந்து விட்டது என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், ஆபத்து காலத்தில் உதவியவர்கள் என்பதாலும் அவர்களுக்கு சுகாதாரநிலையங்களிலும், 'வீடு தேடி மருத்துவம்' போன்ற திட்டங்களில் பணியளிக்கப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்தது. ஆனால், தற்போது இந்த செவிலியர்கள், 'நாங்கள் இனி தற்காலிக பணியில் சேர மாட்டோம். அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என்று கூறி போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அ.தி.மு.க., பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஒப்பந்த செவிலியர்கள் ஈடுபாடு
ஒப்பந்த செவிலியர்கள் முதலில் சேலத்தில் தங்களது போராட்டத்தை துவங்கினர். அங்கு போலீசார் அவர்களை கைது செய்து விடுவித்தது. நேற்று சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டம் மேற்கொண்ட இவர்கள், இன்று வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது இப்போராட்டத்திற்கு அ.தி.மு.க., ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இன்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்து, பணி நிரந்தரத்தை வலியுறுத்தி பேசினார். இவர் அமைச்சராக இருந்தபொழுது தான் இவர்கள் பணியமர்த்தப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.