
வேலூரில் ஒரு கிராமத்தையே வக்ஃப் சொத்து என நோட்டீஸ் அனுப்பிய தர்கா; காங்கிரஸ் எம்எல்ஏ கருத்து
செய்தி முன்னோட்டம்
வேலூர் மாவட்டத்தில் காட்டுக்கொல்லை என்ற ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து நிலங்களும் வக்ஃப் சொத்து என்று கூறி உள்ளூர் தர்காவால் நோட்டீஸ் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து உள்ளூர்வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த கிராமத்தைத் சேர்ந்த சுமார் 150 குடும்பங்களை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த பிரச்சினை குறித்து பேசியுள்ள காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மௌலானா, கிராமவாசிகள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்தார்.
இருப்பினும், வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டால், அந்த நிலங்களில் வசிப்பவர்கள் வாடகை செலுத்த வேண்டியிருக்கும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
ஒருமுறை வக்ஃப் என்று அறிவிக்கப்பட்டால் அது எப்போதும் வக்ஃப் தான் என்று ஹசன் மௌலானா கூறியுள்ளார்.
தர்கா
தர்கா அறிவிப்பின் பின்னணி
உள்ளூர் மசூதி மற்றும் தர்காவின் பராமரிப்பாளரான சையத் சதாம் வெளியிட்ட அறிவிப்புகளில், 1954 ஆம் ஆண்டு வக்ஃப் பதிவு செய்யப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தனது மறைந்த தந்தை விழிப்புணர்வு இல்லாததால் வாடகை வசூலிக்கத் தவறிவிட்டதாகவும், இப்போது வாடகை வசூல் மூலம் நில பயன்பாட்டை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் சதாம் கூறினார்.
நான்கு தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வரும் குடியிருப்பாளர்கள், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்களை வைத்திருப்பதாகவும், உள்ளூர் வரிகளை செலுத்துவதாகவும் வாதிடுகின்றனர்.
சம்பந்தப்பட்ட கிராம மக்கள் சட்ட தெளிவு மற்றும் நில உரிமைகளை கோரி மாவட்ட ஆட்சியரை அணுகியபோது இந்த பிரச்சினை வெளியில் தெரிய ஆரம்பித்தது.
இந்து முன்னணி நிர்வாகி பிரவீன் குமார், குடும்பங்களுக்கு பட்டா வழங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.