Loading...
'நாங்கள் அமைச்சரவையை விட்டு வெளியேறுவோம்': முதல்வர் விஜய் அரசுக்கு காங்கிரஸ் திடீர் அல்டிமேட்டம்
முதல்வர் விஜய் அரசுக்கு காங்கிரஸ் திடீர் அல்டிமேட்டம்

'நாங்கள் அமைச்சரவையை விட்டு வெளியேறுவோம்': முதல்வர் விஜய் அரசுக்கு காங்கிரஸ் திடீர் அல்டிமேட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 31, 2026
12:51 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் (TVK) தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, தனது கூட்டணிக் கட்சிக்கு நேரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வரவிருக்கும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக தவெக ஏற்காவிட்டால், விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இருக்கும் இரு காங்கிரஸ் அமைச்சர்களும் உடனடியாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்கள் எனத் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.ராஜேஷ் குமார் கன்னியாகுமரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ளார்.

தவெக

விஜய்-ஐ பிரதமராக முன்மொழிந்த தவெக அமைச்சர்கள்

சமீபத்தில் சட்டப்பேரவை மற்றும் பொதுக்கூட்டங்களில் தவெக தலைவர்களும் அமைச்சர்களும் விஜய்-இன் தேசிய அரசியல் வளர்ச்சியைப் பற்றித் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டி.சரத்குமார் சட்டப்பேரவையில் பேசும்போது, "எங்கள் தலைவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,"தென்னிந்தியாவில் இருந்து, குறிப்பதாக தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் இந்தியாவின் பிரதமராக வர வேண்டும்" என்ற கருத்தை முன்வைத்தார்.

மூத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூட வட இந்திய மக்களும் தவெக தலைவர் விஜயை ஒரு தேசிய தலைவராகப் பார்க்கத் தொடங்கிவிட்டனர் எனக் கூறினார்.

ரியாக்ஷன்

காங்கிரஸின் கடுமையான பதில்

தவெக தலைவர்களின் இந்த பேச்சுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக, காங்கிரஸ் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.

அமைச்சர் எஸ்.ராஜேஷ் குமார், "எங்களுக்குக் கட்சியை விட வேறு எந்தப் பதவியும் பெரிதல்ல. தவெக ராகுலை ஏற்காவிட்டால் நாங்கள் அமைச்சரவையிலிருந்து வெளியேறுவோம்" என காட்டமாக தெரிவித்தார்.

மற்றொரு அமைச்சர் பி.விஸ்வநாதன், "இந்திய தேசிய காங்கிரஸின் ஒரே பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி மட்டுமே. இதில் எந்த மாற்றமும் இல்லை." என்று கூறியுள்ளார்.

மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தவெக தலைவர்கள் இன்னும் "ரசிகர் மன்ற மனநிலையிலேயே" செயல்படுகிறார்கள் என்று விமர்சித்தார்.

காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம், "பிரதமராகுவது என்பது மக்களவையில் தேவைப்படும் 272 தொகுதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது" என அரசியல் யதார்த்தத்தை எடுத்துக் கூறினார்.

ADVERTISEMENT

முதல் விரிசல்

கூட்டணிக் கதம்பமும் 2029 தேர்தலும்

கடந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தபோது, காங்கிரஸின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மிக முக்கியமாக இருந்தது.

இதன் மூலம் 60 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் தமிழக அமைச்சரவையில் மீண்டும் பங்கேற்றது.

தற்போது ஆட்சி அமைத்துச் சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், 2029 பிரதமர் வேட்பாளர் குறித்த இந்த முரண்பாடு, தவெக - காங்கிரஸ் கூட்டணியில் முதல் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT