காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது: செல்வப்பெருந்தகை மீண்டும் போட்டி.. மேலூரில் மட்டும் ஏன் இவ்வளவு சஸ்பென்ஸ்? பின்னணி ரிப்போர்ட்
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தற்போது வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் தனது சொந்தத் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரில் களம் காண்கிறார். இந்தப் பட்டியலில் 12 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் பொன்னேரியில் துரை சந்திரசேகர், வேளச்சேரியில் ஹசன் மௌலானா, காரைக்குடியில் மாங்குடி மற்றும் நாங்குநேரியில் ரூபி மனோகரன் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். 5 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வியூகம்
பென்னாகரத்தில் ஜிகேஎம் தமிழ்குமரன்: பாமக கோட்டையில் காங்கிரஸ் வியூகம்
இந்த வேட்பாளர் பட்டியலில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பாமகவின் மூத்த தலைவர் ஜிகே மணியின் மகனான ஜிகேஎம் தமிழ்குமரனுக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் காங்கிரஸில் இணைந்த ஆறே நாட்களில் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார். தற்போது பென்னாகரம் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் தனது தந்தை ஜிகே மணிக்கு எதிராகவே அவர் களம் காண வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. லைகா புரொடக்ஷன்ஸில் தயாரிப்பாளராக இருந்த தமிழ்குமரன், டெல்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் கட்சியில் இணைந்தவர் என்பதால், அவருக்கு இந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The Central Election Committee of the Congress has selected the following persons as party candidates for the elections to the Legislative Assembly of Tamil Nadu👇 pic.twitter.com/H3e2e2uw9x
— Congress (@INCIndia) April 3, 2026
மேலூர்
மேலூர் தொகுதியில் நீடிக்கும் சஸ்பென்ஸ்: காரணம் என்ன?
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் போட்டியிடும் 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தாலும், மதுரை மாவட்டம் மேலூர் தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதற்குக் காரணம் அங்கு நிலவும் கடுமையான உட்கட்சிப் போட்டிதான் எனக் கூறப்படுகிறது. மேலூர் தொகுதி 2001 முதல் அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. 2021 தேர்தலில் இங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரவிச்சந்திரன் (எம்பி மாணிக்கம் தாகூரின் மாமனார்) 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த முறை அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க மாநிலத் தலைமை மறுப்பதே இழுபறிக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.
மோதல்
மாணிக்கம் தாகூர் vs செல்வப்பெருந்தகை: மோதலின் பின்னணி
மேலூர் தொகுதியை மீண்டும் தனது மாமனாருக்குப் பெற்றுத் தர மாணிக்கம் தாகூர் முயன்ற நிலையில், செல்வப்பெருந்தகை அங்கு கார்த்திகேயன் என்பவரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே, மார்ச் 28ல் கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவியில் இருந்து மாணிக்கம் தாகூர் விலகியதாகக் கூறப்படுகிறது. மேலும், மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் திமுக தலைமைக்கு எதிராகத் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்ததும், அவர்கள் மீதான மாநிலத் தலைமையின் அதிருப்திக்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. இந்த மோதலால் மேலூர் தொகுதி வேட்பாளர் தேர்வு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில், மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் இன்றிரவு அல்லது நாளை காலை அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.