மன்னிக்க முடியாத கொடூரக் குற்ற செயல்! கோவை சிறுமி படுகொலைக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!
செய்தி முன்னோட்டம்
கோவை அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்று தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட இருவரை 24 மணி நேரத்திற்குள் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
என்ன நடந்தது?
10 வயது சிறுமி கடத்தல் மற்றும் கொடூரக் கொலை
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த ஒரு கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்த 10 வயது சிறுமி, கடந்த வியாழக்கிழமை மாலை கடைக்குச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், நேற்று இரவு கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் உள்ள முட்புதரில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
ஐஜி ரம்யா பாரதி அதிரடி விளக்கம்
5 தனிப்படைகள், 250 சிசிடிவி கேமராக்கள்
இந்தக் கொடூரக் குற்றம் குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யாபாரதி செய்தியாளர்களை சந்தித்து விரிவான விளக்கம் அளித்தார். சிறுமி காணவில்லை என்று புகார் கிடைத்தவுடன் உடனடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. எஸ்பி பவன்குமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சுமார் 250 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த நாகையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கார்த்தி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகிய இருவரை 24 மணி நேரத்திற்குள் போலீஸார் கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுதண்டனை உறுதி செய்யப்படும் என்றும் ஐஜி தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய் ஆணை
மனம் குமுறுகிறேன்... கடுமையான தண்டனை உறுதி
கோயம்புத்தூரில் 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். "இவ்வழக்கில் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் உடனடியாகத் தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இத்தகைய அராஜகச் செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின்கீழ் மிகக் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும்" என்று முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.