கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராம் பதிவு செய்த ரவுடி கும்பல்
கோவையில் ஒரேநாளில் மூன்று கொலைகள் நடந்ததையடுத்து, ஒரு கொலையில் துப்பாக்கிசூடு நடந்தது போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீதிமன்ற வளாகத்தின் அருகில் கோகுல்(23) என்பவர் வெட்டி கொலைசெய்யப்பட்டார். இதுதொடர்பாக 10பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள், ஒருவர் சரணடைந்துள்ளார். போலீசாரை தாக்கிவிட்டு தப்பமுயன்ற ஒருவரை போலீசார் காலில் சுட்டு பிடித்துள்ளார்கள். கோவை முக்கிய நகரங்களில் இருதரப்பட்ட ரவுடி கும்பல் அடிக்கடி மோதிகொண்டு தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் நிகழ்வுகளை நடத்திவந்ததும் அண்மையில் தெரியவந்துள்ளது. 2021ம் ஆண்டு ஸ்ரீராம் என்பவர் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதற்கு பழிவாங்கும் செயலாகவே கோகுல் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து கோவை ரத்தினகிரி பகுதியை சேர்ந்த ரவுடி கும்பல் இன்ஸ்டாகிராம் பதிவில் அடிக்கடி மோதிகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கத்தி, அரிவாள், துப்பாக்கிகளை கொண்டு இன்ஸ்டாகிராம் பதிவுகள்
மேலும் இதுவரை நடந்த அனைத்து கொலைகளும் இந்த இரண்டு கும்பல்களால் முன்கூட்டியே இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்' பதிவுகளில் செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவுகளை கண்ட போலீசாரே சற்று அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. அந்த பதிவுகளில் ரவுடி கும்பல் கையில் கத்தி, அரிவாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களை ஏந்தியாறு சினிமா மற்றும் கானா பாடல்களுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்கள். இது போன்று 50க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர். இந்த கும்பலை 2 ஆண்டுகளுக்கு மேலாக ஒருவர் வழிநடத்தி வருகிறார், ஆனால் அவர் இதுவரை கோவைக்கு வரவில்லை என்னும் தகவலும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அவர் தனது கும்பலுக்கு தனது அறிவுறுத்தல் மற்றும் கட்டளைகளை இன்ஸ்டாகிராம் வாயிலாகவே பகிர்ந்து வந்துள்ளார்.