LOADING...
உடல் குறைபாடு ஒரு தடையல்ல! முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி வென்ற கோவை இளைஞர் அப்துல்லா அப்ரித்: வியக்க வைக்கும் பின்னணி
முயற்சியிலேயே யுபிஎஸ்சி வென்ற கோவை மாற்றுத் திறனாளி இளைஞர் அப்துல்லா அப்ரித்

உடல் குறைபாடு ஒரு தடையல்ல! முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி வென்ற கோவை இளைஞர் அப்துல்லா அப்ரித்: வியக்க வைக்கும் பின்னணி

எழுதியவர் Sekar Chinnappan
Mar 11, 2026
10:47 am

செய்தி முன்னோட்டம்

கோயம்புத்தூரைச் சேர்ந்த 25 வயதான அப்துல்லா அப்ரித், நாட்டின் மிக உயரிய தேர்வான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று (அகில இந்திய அளவில் 942வது ரேங்க்) சாதனை படைத்துள்ளார். மூளை முடக்குவாதம் மற்றும் பார்வைக் குறைபாடு போன்ற சவால்களைக் கொண்டிருந்த போதிலும், விடாமுயற்சியால் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். "உடல் ஊனம் என்பது ஒரு விஷயமே அல்ல, சரியான மனநிலை இருந்தால் எதையும் சாதிக்கலாம்" என்பதே இவரது வெற்றியின் தாரக மந்திரமாக உள்ளது.

கடின உழைப்பு

கடின உழைப்பும் குடும்பத்தின் அர்ப்பணிப்பும்

அப்துல்லா அப்ரித்தின் தந்தை ஒரு நகைத் தொழிலாளி. தனது மகனின் பார்வைக் குறைபாட்டைக் கருத்தில் கொண்டு, அவருக்குத் தேவையான பாடப்புத்தகங்களையும் குறிப்புகளையும் வாசித்துக் காட்டி ஊக்கப்படுத்தியுள்ளார். ஆரம்பநிலைத் தேர்வின் போது ஒரு நாளைக்கு 9 மணிநேரமும், முதன்மைத் தேர்வின் போது 14 மணிநேரமும் அப்ரித் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பார்வைக் குறைபாடு காரணமாக ஆடியோ மெட்டீரியல்களைக் கேட்டே தனது அறிவை வளர்த்துக் கொண்ட அவர், நேர்காணல் தேர்வின் நுணுக்கங்களை மாதிரி நேர்காணல்கள் மூலம் கற்றுக்கொண்டார்.

தமிழ் வழியில் தேர்வு

தமிழ் வழியில் தேர்வு மற்றும் சமூகப் பார்வை

தனது கருத்துக்களை மிகச் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக அப்ரித் சிவில் சர்வீஸ் தேர்வைத் தமிழ் மொழியில் எழுதியுள்ளார். ஆங்கிலப் புலமை என்பது ஒரு வசதியே தவிர, அது வெற்றிக்கு அவசியமான ஒன்றல்ல என்பதை அவர் நிரூபித்துள்ளார். சிறுபான்மையினருக்கான 'இக்லாஸ்' (IKLAS) பயிற்சி மையம் வழங்கிய ஆதரவும் இவரது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. தான் ஒரு 'போராளி' என்று தன்னம்பிக்கையுடன் கூறும் அப்ரித், எதிர்காலத்தில் ஐஏஎஸ் அல்லது ஐஆர்எஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்று ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சேவை செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

பிரதிநித்துவம்

பிரதிநிதித்துவத்தின் அவசியம்

சிவில் சர்வீஸ் போன்ற உயரிய பதவிகளில் மாற்றுத்திறனாளிகளும், சிறுபான்மையினரும் அதிக அளவில் இடம் பெற வேண்டும் என்பதே அப்ரித்தின் விருப்பமாக உள்ளது. கொள்கை முடிவுகளை எடுக்கும் இடத்தில் இவர்களின் பிரதிநிதித்துவம் இருந்தால் மட்டுமே சமூகத்தில் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என அவர் நம்புகிறார். "நாங்கள் ஊனமுற்றவர்கள் அல்ல, தனித்திறன் கொண்டவர்கள்" என்று கூறும் அப்துல்லா அப்ரித்தின் பயணம், பல இளைஞர்களுக்கு ஒரு உந்துசக்தியாக அமைந்துள்ளது.

Advertisement