Loading...
மேட்டூர் அணை நீர் திறப்பு: காவிரி உரிமை எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்கப்படாது என முதல்வர் விஜய் உறுதி
காவிரிஉரிமையை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் தமிழக முதல்வர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்

மேட்டூர் அணை நீர் திறப்பு: காவிரி உரிமை எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்கப்படாது என முதல்வர் விஜய் உறுதி

எழுதியவர் Venkatalakshmi V
Sep 01, 2026
03:55 pm

செய்தி முன்னோட்டம்

காவிரி நீர் என்பது நடுவர் மன்றத் தீர்ப்பாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பாலும் உறுதி செய்யப்பட்ட தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமையாகும் என்றும், அந்த உரிமையை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் தமிழக முதல்வர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 93-வது ஆண்டாக தண்ணீரை இன்று திறந்து வைத்த பின்னர், முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சம்பா சாகுபடி மற்றும் நீர் நிர்வாகம் குறித்துப் பல்வேறு முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

எச்சரிக்கை

"திருட்டுத்தனமாக நீர் உறிஞ்சினால் நடவடிக்கை"

காவிரி ஆற்றுப் படுகைகளில் தண்ணீரைச் சிக்கனமாகவும் திறம்படவும் பயன்படுத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

காவிரி ஆறு மற்றும் கால்வாய் வழித்தடங்களில் சட்டவிரோதமாக மின்மோட்டார்கள் மூலம் நீர் உறிஞ்சுதல் மற்றும் அனுமதியின்றி நீரேற்றுவதை தடுக்க நீர்வளத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகள் அடங்கிய கூட்டு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இரவு பகலாக ரோந்து மேற்கொள்ளப்படும்.

தென்மேற்குப் பருவமழை பற்றாக்குறை மற்றும் தீவிர எல் நினோ தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, குறைந்த நீர் தேவையுள்ள மத்திய கால நெல் ரகங்கள் மற்றும் நேரடி நெல் விதைப்பு முறையை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தகவல்கள்

மேட்டூர் அணை நீர் திறப்பு

அணையின் நீர்மட்டம் 90 அடியைத் தாண்டிய நிலையைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சேலம் வந்தடைந்த முதல்வர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டதால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி உட்பட 12 மாவட்டங்கள் பயனடையும், சுமார் 17 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாதுகாக்கப்படும்.

"நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்; கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்; சம்பா சாகுபடியை வெற்றிபெறச் செய்வோம்" என்று கூறி டெல்டா விவசாயிகளுக்குத் தனது வாழ்த்துகளை முதல்வர் விஜய் தெரிவித்துக் கொண்டார்.

ADVERTISEMENT