Loading...
ஆவடியில் 24 மணி நேரமும் குடிநீர் திட்டம்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு
ஆவடி மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் தடையின்றி முழுமையாகக் குடிநீர் வழங்கப்படவுள்ளது

ஆவடியில் 24 மணி நேரமும் குடிநீர் திட்டம்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 02, 2026
12:18 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரை நிகழ்த்திய முதலமைச்சர் விஜய், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மாநிலத்தின் பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் குடிநீர் மேம்பாட்டு திட்டங்களை அறிவித்தார். வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூரில் நாளொன்றிற்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் ரூ. 4,800 கோடி செலவில் அமைக்கப்படும். மேலும், ஆவடி மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் தடையின்றி முழுமையாகக் குடிநீர் வழங்கும் நோக்கில் ரூ. 500 கோடி மதிப்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை உயர்த்த ரூ. 410 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடைப் பணிகள்

மாவட்ட மாநகராட்சிகளுக்கான நீர் மற்றும் பாதாள சாக்கடைப் பணிகள்

மதுரை, கடலூர் மற்றும் பிற 9 நகராட்சிகள், 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிக்காக ரூ. 1,000 கோடியும், 33 பழமையான கூட்டு குடிநீர் திட்டங்களை சீரமைக்க முதற்கட்டமாக ரூ. 300 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடையைச் சீரமைக்க ரூ. 2,400 கோடியும், நாகர்கோவில், குன்றத்தூர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஆகிய நகர்ப்புறங்களில் புதிய பாதாள சாக்கடைத் திட்டங்களுக்கு ரூ. 960 கோடியும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்பிற்கு ரூ. 236 கோடி செலவிடப்படும்.

சாலை மேம்பாடுகள்

திடக்கழிவு எரிசக்தி மற்றும் நகர்ப்புற சாலை மேம்பாடுகள்

திருநெல்வேலியில் ரூ. 256 கோடி மற்றும் சேலத்தில் ரூ. 291 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் மொத்தம் ரூ. 547 கோடியில் நிறுவப்படும்.

சென்னை உட்பட அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சாலைகளின் சீரமைப்பிற்கு ரூ. 1,850 கோடி ஒதுக்கப்படும்.

பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சாலை வசதிகள் மற்றும் போக்குவரத்து தீவுகளை மேம்படுத்த ரூ. 110 கோடியும், பிற மாநகராட்சிகளின் உட்கட்டமைப்பிற்கு ரூ. 165 கோடியும் என மொத்தம் ரூ. 275 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT