தேசிய குழந்தைகள் தினம்: முதலைச்சர் ஸ்டாலின், ம.நீ.ம தலைவர் கமல் உள்ளிட்டோர் வாழ்த்து
இன்று நவம்பர் 14 , தேசிய குழந்தைகள் தினம். இந்தியாவின் முதல் பிரதமரும், காங்கிரஸ் கட்சியினை தோற்றுவிக்க காரணமாக இருந்த தலைவருமான ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று, இந்தியாவின் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலரும், நேருவின் சமாதிக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினர். நேருவின் பிறந்தநாளுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, குழந்தைகள் தின வாழ்த்து செய்திகளையும் பகிர்ந்து கொண்டார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின். "இன்றைய குழந்தைகள் தான், நாளைய எதிர்காலத்தை உருவாக்குவார்கள். நாம் அவர்களை வளர்க்கும் விதம்தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும்" என நேருவின் வார்த்தைகளோடு, குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார் அவர்.
வாழ்த்துக்கள் தெரிவித்த ம.நீ.ம தலைவர் கமல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். "நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மழலைச் செல்வங்கள் அனைவருக்கும், இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியான நல்வாழ்க்கையை உறுதி செய்வது நம் அனைவரின் கடமை. ஒவ்வொருவருக்கும் சிறந்த கல்வியையும், வாய்ப்புக்களையும் வழங்க உறுதியேற்போம்" என அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ம.நீ.ம தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், "தீங்கில்லாத, மகிழ்வான, கல்வி பெறும் சூழல்கொண்ட வாழ்க்கை வாழ சிறாருக்கு என் குழந்தைகள் தின வாழ்த்துகள். குழந்தை மனம் கொண்டோருக்கும் வாழ்த்து உரித்தாகட்டும்" என பதிவிட்டுள்ளார்.