தமிழகத்தில் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவையில் மகளிர் உரிமைதொகை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(மார்ச்.,27) பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தற்போதைய காலகட்டத்தில் மகளிர் உதவிதொகை திட்டம் மகத்தான திட்டமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு வளமான, வலிமையான மாநிலமாக மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை அறிவித்துவருகிறது. தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் மட்டுமல்லாமல் அளிக்கப்படாத விஷயங்களும் செய்யப்பட்டுவருகிறது. சமூகத்தில் வெற்றிப்பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால் நிச்சயம் ஒரு பெண் இருப்பார். அந்த பெண்களை கருத்தில் கொண்டே இந்த உரிமைதொகை திட்டம் Universal Basic Incomeஎன்னும் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார். தொடர்ந்து இந்த திட்டத்தின்மூலம் வறுமை குறைய வாய்ப்புள்ளது. குழந்தைகள் கல்வி மற்றும் பெண்களின் தன்னம்பிக்கை உயரும் என்னும் அடிப்படையில் தான் இந்தத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
பெண்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உரிமைத்தொகை திட்டம்
தொடர்ந்து பேசிய அவர், மகளிர் உரிமை தொகை இரண்டு நோக்கங்களை கொண்டது. இது பெண்களுக்கு கொடுக்கும் அங்கீகாரம். மாதம் ரூ.1000 என்பது பெண்களின் வறுமையை ஒழித்து, சுயமரியாதையோடு அவர்கள் வாழ வழிவகுக்கும் என்று கூறினார். இது தேவைப்படும் குடும்ப தலைவிகளுக்கு நிச்சயம் வழங்கப்படும். நடைபாதையில் வணிகம் செய்யும் பெண்கள், மீனவ பெண்கள், கட்டுமான தொழிலில் உள்ள பெண்கள் என தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பினை வழங்கும் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். விரைவில் இந்த திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.