கர்நாடகாவில் நள்ளிரவில் பயங்கரம்: பேருந்தும் லாரியும் மோதி தீப்பிடித்ததில் 9 பேர் பலி
செய்தி முன்னோட்டம்
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில், தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. ஹிரியூர் தாலுகா, கோர்லத்து கிராஸ் (Gorlathu Cross) அருகே தேசிய நெடுஞ்சாலை 48-ல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பெங்களூருவிலிருந்து ஷிமோகா நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் ஸ்லீப்பர் கோச் பேருந்து மீது, எதிரே வந்த லாரி நிலைதடுமாறி மோதியது. ஹிரியூரிலிருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த அந்த லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்பை தாண்டி வந்து பேருந்தின் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்து காரணமாக அந்த நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து
தீயில் கருகிய பேருந்து
மோதிய வேகத்தில் பேருந்து திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. பேருந்துக்குள் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் தப்பிக்க முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். 9 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 21 பேர் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது. விபத்தில் காயமடைந்த பலர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. தீ விபத்தினால் பேருந்து முற்றிலும் உருக்குலைந்ததால், உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்திற்குக் காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சித்ரதுர்கா எஸ்.பி ரஞ்சித் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.